சிஎஸ்கேவுக்கு ஜாக்பாட்.. மும்பை இந்தியன்ஸ் மீது கடும் அதிருப்தியில் சூர்யகுமார் யாதவ்
சென்னை : சூர்யகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணி மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவர் அடுத்த ஐபிஎல் ஏலத்துக்கு முன் அந்த அணியால் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதன்பின் அவர் வேறு ஐபிஎல் அணிக்கு மாறக் கூடும் எனவும் கடந்த இரண்டு மாதங்களாக தகவல்கள் வலம் வருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா தலைமையில் செயல்பட்டு வந்தது. அவருக்கு அடுத்ததாக அணியை வழிநடத்தக் கூடிய வீரர்களாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் கருதப்பட்டனர். 2022 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி, தனக்கு கேப்டன் பதவி அளித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு மாறினார்.
அதனால் அப்போது ரோஹித் சர்மாவுக்கு அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவுக்கு தான் கிடைக்கும் என கூறப்பட்டது. அணி நிர்வாகத்திலும் இந்த முடிவு பேசப்பட்டு இருக்கக் கூடும். அதன் விளைவாக, ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய போதும், ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு பாண்டியாவை கேப்டனாக அறிவித்த போதும் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் தங்கள் எதிர்ப்பை மறைமுகமாக சமூக ஊடகங்களில் காட்டினர்.
2024 ஐபிஎல் தொடரில் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து ஆடுவார்கள். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால், அதன் பின் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர்கள் மும்பை அணியால் தக்க வைக்கப்படும் நான்கு வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.