ஜன. 22ஆம் தேதி மம்தா பானர்ஜி தலைமையில் மத நல்லிணக்கப் பேரணி!
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் அனைத்து மதத்தினரும் கலந்துகொள்ளும் மத நல்லிணக்க பேரணி நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன், அயோத்தியில் ராமர் கோயிலுக்குத் திறப்பு விழா நடத்துவது தேர்தலுக்காக பா.ஜ.க நடத்தும் வித்தை என மம்தா பானர்ஜி ஏற்கெனவே விமர்சித்திருக்கிறார். இப்போது அயோத்தியிங் கோயில் திறக்கப்படும் அதே நாளில் பேரணி ஒன்றை அறிவித்துள்ளார்.
“ஜனவரி 22ஆம் தேதி காளிகாட் கோவிலுக்கு சென்று பூஜை செய்வேன். அதன்பிறகு அனைத்து மதத்தினருடன் நல்லிணக்க பேரணியில் பங்கேற்பேன். இதற்கும் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் சம்பந்தம் இல்லை” என மம்தா கூறியுள்ளார். தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா கிராசிங்கில் இருந்து ஊர்வலத்தை தொடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அணிவகுப்பு, மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் குருத்வாராக்கள் உட்பட பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களைத் தொட்டு, பார்க் சர்க்கஸ் மைதானத்தில் முடிவடையும் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, அயோத்தி விழாவில் இருந்து விலகி இருக்கும் முடிவை அறிவித்த மம்தா, “எல்லோரையும் உள்ளடக்கிய பண்டிகைகளை நான் கொண்டாடுகிறேன். வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு இருக்கும் வரை சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அல்லது பழங்குடியின மக்கள் மீது எந்த பாகுபாடும் இருக்காது” என்றார். “வங்காளத்தில் பிளவு மற்றும் பாகுபாடுகளுக்கு இடமில்லை” எனவும் அவர் கூறினார்.
ராமர் கோயில் விழாவை முழுக்க முழுக்க மோடியின் விழாவாக பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் ஆக்கிவிட்டதாக காங்கிரஸ் இன்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது.