காரை வென்ற மாடுபிடி வீரர் ‘பிரபாகரன்’..!
பொங்கல் பண்டிகையையும் ஜல்லிக்கட்டுப் போட்டியையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழர்களுடைய வீரத்தையும், பாரம்பரியத்தையும் உலகறியச் செய்த இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தைப் பொங்கலையொட்டி ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலகப் புகழ்பெற்றவை. இதில், பாலமேட்டில் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் அமைக்கப்பட்ட வாடிவாசலில் தமிழக அரசும், பாலமேடு கிராமப் பொது மகாலிங்க மடத்துக் குழுவும் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின.
1000 காளைகள், 600 வீரர்கள் – மதுரை மட்டுமில்லாது தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள சிறந்த காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்க 3,677 காளைகளும் 1,412 மாடு பிடி வீரர்களும் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். அதில், 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். காலை 7 மணியளவில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அதன் பிறகு போட்டியை வணிக வரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துப் போட்டியைத் தொடங்கி வைத்தார். சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், மடத்து குழுத் தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் நிர்வாகிகள், கலந்து கொண்டனர். வாடிவாசல் அருகே களத்தில் வீரர்களும் காளைகளும் விளையாடுவதற்கு ஏதுவாக தேங்காய் நார்க் கழிவுகள் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு ஒன்றரை அடி உயரத்துக்கு கொட்டப்பட்டிருந்தது.
கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் ராஜ்குமார் தலைமையில் 3 உதவி இயக்குநர்கள், 16 கால்நடை ஆய்வாளர்கள், 16 கால்நடை உதவியாளர்கள் தலைமையிலான குழுவினர் மாடுகளைப் பரிசோதனை செய்தனர். அவர்கள் பரிசோதனை செய்த பிறகே காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்க்கப்பட்டன. முதலில் பாலமேடு கிராமப் பொது மகாலிங்க மடத்துக் காளை உட்பட பல்வேறு கோயில் காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன. அதன்பிறகு மாடுபிடி வீரர்கள் அடக்குவதற்காக ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்துவுிடப்பட்டன. போட்டி மொத்தம் 10 சுற்றுகளாக நடந்தன.
ஒவ்வொரு சுற்றிலும் 50 முதல் 75 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளைப் பிடிக்கும் வீரர்கள் அடுத்த சுற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு காளை உரிமையாளரையும் விழாக் குழுவினர் கவுரவிக்கும் வகையில் வாடிவாசலில் வைத்து வேட்டி, துண்டு வழங்கப்பட்டன. அதன்பிறகு அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். காளை மூன்று சுற்றுகள் சுற்றும் வரை வீரர் திமிலை இறுகப் பற்றியிருந்தால் அல்லது 100 மீட்டர் தூரம் வரை திமிலைப் பிடித்தவாறு சென்றால் மட்டுமே மாடு பிடி வீரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஒரே நேரத்தில் பலர் காளையைப் பிடிக்க முயன்றபோது அந்தக் காளை பிடிக்கப்படாத காளையாக அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு காளையும் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டதும் மாடுபிடி வீரர்களை நோக்கிச் சீறிப் பாய்வதும் அவற்றை மாடுபிடி வீரர்கள் ஆக்ரோஷம் கொண்டு திமிலைப் பிடித்து அடக்குவதுமாக போட்டி சுவாரஸ்யமாகவும் உற்சாகமாகவும் நடந்தது.
சிறந்த மாடுபிடி வீரர் பிரபாகர்: மொத்தம் 10 சுற்றுகள் நடந்த போட்டியில் 14 காளைகளை அடக்கி மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர் சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வானார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் பி.மூர்த்தி காரை பரிசு வழங்கினார். 11 காளைகளை அடக்கிய அலங்காநல்லூர் அருகே சின்னப்பட்டி தமிழரசனுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது.
சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு பெற்ற பிரபாகரன் கூறுகையில், “நான் ஒன்பதாம் வகுப்பு படித்துள்ளேன். அரசு வேலை வழங்கினால் நன்றாக இருக்கும். இதுபோன்ற ஆடம்பரமான கார் பரிசு எங்களுக்கு தேவையில்லை. இந்த கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டாகவே வலியுறுத்தி வருகிறோம். உயிரை பணயம் வைத்து விளையாடுகிறோம். கார் பரிசுக்கு பதிலாக அரசு வேலை கிடைத்தால் எங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும். மற்ற விளையாட்டுகளில் வெற்றி பெற்றால் அரசு வேலை தேடி சென்று கொடுக்கப்படுகிறது. இதுவும் விளையாட்டுதான். அதைவிட நம்முடைய பாரம்பிரய விளையாட்டு. அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” என்று கோரிக்கை வித்தார்.
சிறந்த காளையாக புதுக்கோட்டை மாவட்டம் ராய வயல் கிராமத்தைச் சேர்ந்த மருதுபாண்டி என்பவரின் சின்ன கருப்பு காளை சிறந்த காளையாக தேர்வானது. இந்தக் காளையின் உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் கோட்டூரை சேர்ந்த அமர்நாதன் என்பவரின் காளை சிறந்த இரண்டாவது காளையாக தேர்வானது. இந்த காளைக்கு அலங்கை பொன்குமார் சார்பில் கன்றுடன் கூடிய நாட்டினப் பசு மாடு வழங்கப்பட்டது. காளை பிடிபட்டால் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசு, பீரோ, அண்டா, சேர், கட்டில், மெத்தை, மிக்ஸி, விலை உயர்ந்த சைக்கிள்கள் உள்பட பல்வகைப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
சில காளைகள் மீது அதன் உரிமையாளர்கள் விலை உயர்ந்த பொருட்களைப் பரிசாகக் கட்டி, மாடுபிடி வீரர்களைச் சீண்டினர். அந்தக் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. பல காளைகள் வீரர்களைத் தூக்கிப் பந்தாடின. அந்தக் காளைகளுக்கு விழாக் குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. சில காளைகள் பிடிபடாததோடு வாடிவாசலில் நின்று மண்ணைக் கிளறி, காலை முன்னும் பின்னும் எடுத்து வைத்து `பக்கத்தில் வந்து பாரு’ என வீரர்களை அச்சுறுத்தும்விதமாக வீரர்களை சிதறி ஓடவைத்தன.
அதோடு நிற்காமல் அவர்களை புறமுதுகு காட்டி தப்பித்தால் போதும் என சில காளைகள் ஓட வைத்தன. இந்தக் காட்சி பார்வையாளர்களர்கள் இடையே அச்சத்தையும், பின்னர் கலக