செல்போன் கொண்டு வந்தால் உண்டியலில் போடப்படும்..பழனி பக்தர்கள் அதிர்ச்சி..!
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதனிடையே, அண்மையில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் வரக்கூடாது என்று ஒரு அறிவிப்புப் பலகை அங்கு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்புப் பலகை பெரும் சர்ச்சையானதை அடுத்து, அது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அங்கேயே வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது பழனி முருகன் கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரூல்ஸ் ஒன்றும் சர்ச்சையாகி உள்ளது. அதில், “பழனி முருகன் கோயிலுக்குள் அனுமதியின்றி செல்போன் கொண்டு வந்தால் பக்தர்களிடம் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும்” என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்று அப்படி செல்போன் கொண்டு வந்த ஒருவரிடம் இருந்து ரூ.500 அபராதம் இன்று வசூலிக்கப்பட்டது.
அப்போது, 500 ரூபாய் அபராதம் கொடுக்கவில்லை என்றால் செல்போனை பிடுங்கி உண்டியலில் போடுவோம் என கோயில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.