சர்க்கரை நோயாளிகளே! கரும்பு சாப்பிட்டா ‘சுகர்’ அதிகரிக்கும்-ன்னு பயப்படுறீங்களா? இந்த டீயை ஒரு கப் குடிங்க…
Diabetes Control Tips In Tamil: இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான சர்க்கரை நோயாளிகள் உள்ளனர்.
மேலும் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை என்பதால், பலரும் வீடுகளில் சர்க்கரை பொங்கல், கரும்பு போன்றவற்றை சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகள் பண்டிகை காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென அதிகரித்துவிடும். சர்க்கரை பொங்கலைக் கூட அளவாக சாப்பிட்டு நிறுத்திவிட முடியும். ஆனால் கரும்பை சாப்பிடாமல் இருப்பது என்பது கடினமான ஒன்று. ஏனெனில் கரும்பு மிகவும் இனிப்பாக இருப்பதால், எங்கு அதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை சட்டென்று அதிகரித்துவிடுமோ என்ற பயம் தான்.
நிறைய பேருக்கு சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா என்ற ஒரு கேள்வி மனதில் இருக்கும். நிச்சயம் சர்க்கரை நோயாளிகள் கரும்பை சாப்பிடலாம். ஆனால் அதை அளவாக, ஆசைக்கு சிறிது சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டால் பின் அவதிப்பட வேண்டியிருக்கும்.
பண்டிகை காலத்தில் சர்க்கரை நோயாளிகள் எந்த ஒரு இனிப்பை உட்கொண்ட பின்னரும், இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் ஒருசில மூலிகை பானங்களைக் குடிப்பது நல்லது. இதனால் இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இப்போது அந்த மூலிகை பானங்களைக் காண்போம்.
க்ரீன் டீ
க்ரீன் டீ ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானமாகும். க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரிந்தாலும், அதில் உள்ள உட்பொருட்கள் இரத்த சர்க்கரையையும் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பண்டிகை காலத்தில் இனிப்பு பொருட்களை உட்கொண்ட பின் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்தால் சுகர் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
ப்ளாக் டீ
ஆம், சிம்பிளான ப்ளாக் டீ கூட இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்தும். எனவே பண்டிகை காலத்தில் கண்ட டீயைக் குடிப்பதற்கு பதிலாக ப்ளாக் டீயைத் தயாரித்து குடித்து வந்தால், பண்டிகை பலகாரங்களை பயமின்றி சாப்பிடுவதோடு, இரத்த சர்க்கரையும் கட்டுப்படும்.
சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் காப்ஃபைன் இல்லை என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான பானமாகும். முக்கியமாக இந்த டீ நல்ல நிம்மதியான தூக்கத்தை வழங்கும். ஒருவர் நல்ல தூக்கத்தை தினமும் மேற்கொண்டு வந்தாலே, இரத்த சர்க்கரையையைக் கட்டுப்படுத்தலாம். எனவே இந்த டீயை பகல் வேளையை விட இரவு தூங்குவதற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.
செம்பருத்தி டீ
செம்பருத்தியில் பாலிஃபீனால் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அந்தோசையனின்கள் உள்ளதால், இவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான டீயாகும். இந்த டீயைக் குடித்தால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறையும். செம்பருத்தி டீ இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதைத் தவிர, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றையும் கட்டுப்படுத்த உதவி புரிகிறது மற்றும் இது எடை இழப்புக்கும் உதவுகிறது.