Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு தொலைந்துபோன உறக்கம்… சரிசெய்ய வாய்ப்பிருக்கிறதா?
Doctor Vikatan: எனக்கு 48 வயதிலேயே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாக எனக்கு இரவுத் தூக்கம் பெரிய பிரச்னையாக இருக்கிறது.
பாதி உறக்கத்தில் விழித்துக்கொள்கிறேன். அதன்பிறகு தூங்க முடிவதில்லை. இதை சரிசெய்ய ஏதேனும் தீர்வு உண்டா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
இந்தப் பிரச்னையை ‘இன்சோம்னியா’ (Insomnia) என்கிறோம். மெனோபாஸ் காலத்தில் 60 சதவிகிதப் பெண்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் சில பெண்களுக்குத் தூக்கமே வராது. சிலருக்கு தூக்கத்தைத் தக்கவைப்பதில் சிரமம் இருக்கும்.
இன்னும் சிலருக்கு அதிகாலையில் விழிப்பு வந்துவிடும். மீண்டும் தூக்கத்தைத் தொடர்வது சிக்கலாக இருக்கும். இந்தப் பிரச்னைகள் எல்லாமே மெனோபாஸ் காலகட்டத்தில் சகஜமாக ஏற்படுபவை என்கின்றன ஆய்வுகள்.
ஒரு வருட காலத்துக்கு பீரியட்ஸே வராமலிருந்தால் அதை மெனோபாஸ் என்கிறோம். மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டமான பெரிமெனோபாஸ் காலகட்டத்திலேயே நம் சினைப்பைகள், ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கிவிடும். ஹார்மோன் சுரப்பு குறைவதால் உடலளவிலும் உளவியல்ரீதியாகவும் நிறைய பிரச்னைகள் ஏற்படும். தூக்க சுழற்சி பாதிக்கப்படுவதும் நடக்கும்.