ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜகதீப் தன்கரை எதிர்க்கட்சிகள் அவமதித்து விட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “2017 ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஹமீது அன்சாரி குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் பத்தாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
இந்தியாவின் புகழ்பெற்ற ராஜதந்திரிகளில் ஒருவரான ஹமீது அன்சாரியை பிரதமர் மோடி கேலி செய்யும் விதமாக பேசினார். அவரது மத அடையாளத்தைக் குறிப்பிட்டு, அவரது முழு அரசியல் சாதனைகளும் அவரது மத அடையாளத்தால்தான் கிடைத்தது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.
மேலும் அன்றைய தினம் நாடாளுமன்ற நூலக அரங்கில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்விலும் பிரதமர் மோடி மீண்டும் அவ்வாறு பேசினார்.
இப்படிப்பட்ட ஒரு பிரதமரும், அவரது ஆதரவாளர்களும் தற்போது அரசியலமைப்பு நிறுவனங்களின் மீதான அவமரியாதை பற்றி பேசுவது அவர்களின் சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் இருந்து 144 எம்.பி.க்கள் மீதான ஜனநாயக விரோத இடைநீக்கம் மற்றும் டிசம்பர் 13-ஆம் தேதி மக்களவையில் நடந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய பாதுகாப்பு மீறல் ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே பாஜகவினர் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகின்றனர்.” என்று கூறி அதுதொடர்பான விடியோ காட்சியையும் பதிவிட்டுள்ளார்.
It was August 10, 2017 during the farewell to Shri. Hamid Ansari, who was retiring as Vice President and Chairman of the Rajya Sabha after a long ten year tenure. It was then most shockingly that the Prime Minister mocked Mr. Ansari, one of India’s most distinguished diplomats,… pic.twitter.com/sNRCtauWEq
— Jairam Ramesh (@Jairam_Ramesh) December 20, 2023