அதிகப்படியான காற்று மாசால் ஸ்ட்ரோக் உண்டாகலாம் – எச்சரிக்கும் ஆய்வு முடிவு
பொதுவாக உடல் இயக்கமற்ற முடங்கிய வாழ்க்கை முறை மற்றும் மிக மோசமான உணவு பழக்கம் போன்றவற்றை கொண்டவர்களுக்கு இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் பாதிப்புகள் ஏற்படலாம் என மக்கள் மத்தியில் கருத்து உள்ளது.
ஆனால் இதையெல்லாம் நீங்கள் கவனமாக பார்த்துக் கொண்டாலும் நீங்கள் வசிக்கின்ற இடத்தில் மிகுதியான காற்று மாசு இருக்கும் பட்சத்தில் நீங்களும் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான அபாயத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
அதிலும் குளிர்காலத்தில் நம் உடலில் ரத்த ஓட்டம் துரிதமாக இருக்காது. இத்தகைய சூழலில் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இப்படி ஒரு சூழலில் டெல்லியில் வாழும் மக்களின் உடல்நிலை தான் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ஏனென்றால் அங்குதான் நாட்டிலேயே மிக அதிகபட்சமாக காற்று மிக மோசமான தரத்துடன் இருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளிலும் கூட காற்று மாசு நிலவுவதை நாம் பார்க்க முடிகிறது.
ஸ்ட்ரோக் ஏற்படுவது எப்படி :
குளிர்காலத்தில் நம்முடைய ரத்தத்தின் அடர்த்தி மிகுதியாக இருக்கும். அதேபோல மூளை மற்றும் உடலின் இதர பாகங்களுக்கு ரத்தத்தை சுமந்து செல்லும் நரம்புகள் சுருக்கமடையும். ஆகவே போதுமான அளவுக்கு ரத்த ஓட்டம் இன்றி, ரத்த அழுத்தம் அதிகரிப்பதன் காரணமாக ஸ்ட்ரோக் ஏற்படலாம்.
நாம் காற்று மாசுக்கு உட்படும்போது இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் வாகனங்கள், வீட்டில் பயன்படுத்தும் எரிபொருள், நம்மை சுற்றியுள்ள தொழிற்சாலைகள், குறிப்பாக ரசாயன ஆலைகள் போன்றவற்றில் இருந்து காற்று மாசுபாடு அடைகிறது.
மிகுந்த வாகன நெருக்கடி கொண்ட சாலையில் நாம் பயணிக்கும் போது, வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவை கலந்த காற்றை நாம் சுவாசிக்க நேரிடும். காட்டு தீ அல்லது சுற்றுப்புற பகுதிகளில் பற்ற வைக்கப்படும் தீ போன்றவற்றில் இருந்து வெளி வருகின்ற புகையின் காரணமாகவும் காற்று மாசுபாடு அடையும். மாசடைந்த காற்றை நாம் சுவாசிப்பதால் இதய நோய் முதல் பல்வேறு வகையிலான உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
காற்று மாசுபாடு மற்றும் ஸ்ட்ரோக் தொடர்பு :
மாசடைந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது நம் உடலில் atherosclerosis என்னும் நிலை ஏற்படும். இதனால் நம் ரத்தநாளங்களில் கொலஸ்ட்ரால் படிவதற்கு வாய்ப்பு உண்டு. அதன் தொடர்ச்சியாக ஸ்ட்ரோக் ஏற்படக் கூடும்.
மாசடைந்த காற்றில் நைட்ரஜன் டையாக்சைடு, ஓசோன், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டையாக்சைடு போன்ற நச்சுக்கள் இருக்கும். எரிக்கப்படும் தீ, வாகனங்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வெளியேறுகின்ற நுண்ணிய மாசு பொருட்கள் போன்றவை சுவாசத்தின் வழியாக நம் உடலில் புகுந்து மூளைக்குச் செல்கின்ற ரத்த நாளங்களில் அடைப்புகளை ஏற்படுத்தக் கூடும்.
தடுப்பு நடவடிக்கைகள் :
வெளியிடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து பயணிக்கலாம். நாள் முழுவதும் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏற்கனவே நுரையீரல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.