யானைகள் முகாமில் பொங்கல் விழா : உற்சாகத்துடன் நடனமாடிய வளர்ப்பு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் மோரனப்பள்ளி கிராமத்தில் பிரத்தியங்கரா தேவி சித்தர் பீடத்தில் கோமாதா சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பசு மாட்டிற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, அங்கவஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு மலர் மாலைகள் சூடப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விவசாய நிலைத்தில் உழுது உழவர் திருநாளை கொண்டாடினார். தலைப்பாகை கட்டிக்கொண்டு மாட்டின் கொம்புகளுக்கு கருப்பு சிவப்பு வர்ணம் தீட்டிய அமைச்சர், மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பழம் அரிசி வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஒன்றாக சேர்த்து அளித்து குடும்பத்தினருடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடினார்.

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாட்டுப் பொங்கலை ஒட்டி, நந்திக்கு சுமார் 2 டன் காய்கறிகள், பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோயில் வளாகத்திற்குள் 108 பசு மற்றும் கன்றுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே அகத்தீஸ்வரர் கோயிலில், மாட்டுப்பொங்கலை யொட்டி, அகத்தீஸ்வரர் கோயிலில், நந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான காய்கனிகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் “மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்திக்கு 508 கரும்புகளால் பந்தலிட்டு காய்கறிகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கேரட், முள்ளங்கி, கத்தரிக்காய் , பீன்ஸ், மிளகாய், காலிபிளவர், எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பெரம்பலூரில், கால்நடைகளுக்கு பொங்கல் ஊட்டி, கோலாகலமாக மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தனியார் பால் பண்ணைகள், மாடு வளர்ப்பு விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் என அனைத்து தரப்பினரும் ஆடு , மாடு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளையும் குளிப்பாட்டி தூய்மை செய்து, வண்ணப் பொடியினால் அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து படையலிட்டு நன்றி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைச்சர் மஸ்தான் விமரிசையாக மாட்டுப் பொங்கலை கொண்டாடினார். நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். பின்னர் அங்குள்ள பசுமாடுகளுக்கு பழங்களை ஊட்டினார்.

பழனி அருகே பழைய ஆயக்குடியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக சென்றனர். மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் மாட்டு வண்டியில் குடும்பத்தினருடன் ஊர்வலமாகச் சென்றனர்.

திண்டுக்கல் அருகே சிறுமலை கிராமத்தில் குதிரை பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் விளையும் காய்கறிகளை குதிரையின் முதுகில் மூட்டையாக கட்டி தான் கொண்டுவர முடியும். இந்நிலையில் மாட்டுப்பொங்கலையொட்டி கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக குதிரைகளுக்கு சலங்ககை கட்டி பொங்கல் வைத்து நன்றி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் நடைபெற்ற யானை பொங்கல் விழாவில் வனவர் சோழமன்னன் யானையை புகழ்ந்து பாடல் பாடினார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. யானைகளுக்கு வெண் பொங்கல் உட்பட சிறப்பு அறுசுவை பழ வகைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா பழங்குடியினர் இசைக்கு ஏற்றவாறு நடனமாடினார். அப்போது, உணவு மாடத்தில் நின்றிருந்த பாமா என்ற வளர்ப்பு யானை இசைக்கு ஏற்றவாறு தலையை அசைத்து ஆட்டம் போட்டது.பாமா யானை உற்சாகமாக தலையை அசைத்து ஆட்டம் போட்டதை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் ரசித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *