ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்த இளைஞர்.. நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்
நாமக்கல் நகரில் உள்ள முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் 37 வயதான ராஜா. இவர் இந்திய ஆட்சி ஆட்சிப்பணி அதிகாரியாக இருப்பதாக கூறி திருமணத்திற்கு பெண் தேடி வந்துள்ளார். மிசவுரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி முடித்திருப்பதாக கூறி கேட்போரிடம் எல்லாம் அடையாள அட்டை ஒன்றை காண்பித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமாரபாளையத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பின் இருவரும் ராஜாவின் வீட்டிலேயே வசித்து வந்தனர். அப்போது, ராஜா எந்த பணிக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததைக் கண்டு பெண்ணுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்து அந்த பெண் ராஜாவிடம் கேட்டபோது, ஏதாவது கூறி சமாளித்து வந்துள்ளார். நாட்கள் போக போக ராஜாவின் நடவடிக்கையில் பெண்ணுக்க சந்தேகம் வலுத்துள்ளது.
இதனையடுத்து ராஜாவின் கல்வி ஆவணங்களை ரகசியமாக எடுத்து பார்த்த போது, அவர் ஐஏஎஸ் அதிகாரி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் ராஜாவிடம் கேட்ட போது, அவரை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் பூட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வீட்டை வீட்டு வெளியே வந்த பெண் மோகனூர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அதில், தனது கணவர் ராஜா தன்னை ஐஏஎஸ் என ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாகவும், அவருக்கு உறுதுணையாக அவரது தாய் சாந்தி, தந்தை கந்தசாமி, சித்தி தமிழ்செல்வி ஆகியோர் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையறிந்த ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். வழக்குப்பதிவு செய்த மோகனூர் போலீசார் தலைமறைவாக உள்ள ராஜா உட்பட 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.