எம்ஜிஆர் பிறந்த நாள் : மேடை நாடக கலைஞன் to மக்களின் முதல்வன்.. மறக்க முடியாத எம்ஜிஆர் நினைவுகள்
இலங்கை கண்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வேலு நாயரின் வீட்டில் தமது இரண்டு பிள்ளைகளுடன் அடைக்கலமானார்.அங்கு வீட்டு வேலை செய்து தனது இரு பிள்ளைகளை சத்யபாமா காப்பாற்றினார்.
பதினான்கு வயதில் நடிப்புத்துறைக்குள் நுழைந்த எம்ஜிஆர் ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். 1936ஆம் ஆண்டில் தனது 20ஆவது வயதில் சதி லீலாவதி என்ற படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார் எம்ஜிஆர். அதன்பின் வெள்ளித்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.1950ஆம் ஆண்டில் வரலாற்றுக் காவியமான மந்திரி குமாரி என்ற படத்தில் நடித்த எம்ஜிஆரின் கதாபாத்திரம், அவரை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
சாமானிய மக்களுடனான பிணைப்பை அதிகரிக்க வேண்டும் என விரும்பிய எம்ஜிஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சிறிது காலத்திலேயே தேசிய அரசியலில் இருந்து விலகிய எம்ஜிஆர், அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகத்தில் 1953ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். 1962இல் தனது 50வது வயதில் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1967இல் எம்எல்ஏ ஆகவும் இருந்தார் எம்ஜிஆர். 1969இல் திமுகவின் பொருளாளராக எம்ஜிஆர் நியமிக்கப்பட்டார். 1969இல் அண்ணாதுரை காலமான பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்றார் கருணாநிதி. திரையுலகிலும், அரசியலிலும் பங்காளிகளாக இருந்து வந்த கருணாநிதிக்கும், எம்ஜிஆருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஒரு கட்டத்தில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார்.
1972 அக்டோபர் 18ஆம் தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார் எம்ஜிஆர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாயத்தேவர் பெரும் வெற்றிபெற, தி.மு.க.வின் வேட்பாளரான பொன். முத்துராமலிங்கம் மூன்றாவது இடத்தையே பிடித்தார். இந்த நிலையில் 1975 ஜூன் 26ஆம் தேதி நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதாக பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். நெருக்கடி நிலையை எதிர்த்து வந்த திமுக. அரசு 1976 ஜனவரி 31ஆம் தேதி கலைக்கப்பட்டது.
ஒன்றரை ஆண்டுகாலம் நீடித்த நெருக்கடி நிலை 1977இல் முடிவுக்கு வந்தது. அதன்பின் 1977 மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழ்நாட்டில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு தமிழக சட்டமன்ற தேர்தல் ஜூன் மாதம் நடைபெற்றது. இதில், முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருந்த அதிமுக கூட்டணி அபார வெற்றிபெற்றிருந்தது. இந்தக் கூட்டணியில் அதிமுக மட்டும் 130 இடங்களைப் பிடித்தது. முதலமைச்சராக எம்ஜிஆர் பொறுப்பேற்றார்.
ஆனால், அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று, மொரார்ஜி தலைமையில் ஆட்சி ஏற்பட்டது. அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார் எம்ஜிஆர். பின்னர் சரண் சிங் அரசுக்கும் தமது ஆதரவை அளித்தார் எம்ஜிஆர். சரண் சிங் ஆட்சிக்கு பிறகு, நடந்த தேர்தலில், இந்திரா காங்கிரஸுடன் திமுக கூட்டணி சேர்ந்தது. அதன்பின் கருணாநிதி கொடுத்த அழுத்தத்தால் எம்ஜிஆர் அரசு 1980இல் கலைக்கப்பட்டது. அப்போது சில மாதங்கள் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் இருந்த பிறகு நடந்த தேர்தலில் எம்ஜிஆர் கூட்டணி வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த அரசே 1987ஆம் ஆண்டில் எம்ஜிஆர் சாகும்வரை மாநிலத்தில் தொடர்ந்தது. அவரது இறப்புக்குப் பிறகு, 1988ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதை வழங்கி கெளரவித்தது, அப்போதைய காங்கிரஸ் அரசு.
1936ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டுவரை எம்ஜிஆர் நடித்த படங்களின் எண்ணிக்கை 136. அவற்றில் 132 படங்கள் தமிழிலும், இரண்டு படங்கள் மலையாள மொழியிலும், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் தலா ஒரு படமும் அடங்கும். 1972ஆம் ஆண்டில் ரிக்ஷாகாரன் படத்தில் நடித்ததற்காக எம்ஜிஆருக்கு தேசிய விருது கிடைத்தது. இதன்மூலம் தென்னிந்தியாவில் இருந்து சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்ற முதலாவது நடிகராக எம்ஜிஆர் அறியப்பட்டார்.
அரசியலிலும், திரைத்துறையிலும் கொடிகட்டிப் பறந்த எம்ஜிஆரின் 107-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.