ஏப்ரிலியா மிகவும் நுணுக்கமா உருவாக்கி இருக்கும் பைக்!! ஓட்டுவதற்கு எப்படி இருக்கு? முழு டெஸ்ட் ரைடு விமர்சனம்!
ஏப்ரிலியா (Aprilia), இத்தாலியை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். பந்தயங்களுக்கு ஏற்ற ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும், சூப்பர் பைக்குகளையும் உற்பத்தி செய்வதில் ஏப்ரிலியா நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது. இந்த வகையில், ஏப்ரிலியா நிறுவனத்தில் இருந்து புதியதாக வெளிவந்துள்ள மோட்டார்சைக்கிள் ஏப்ரிலியா ஆர்.எஸ்457 ஆகும்.
மிடில்வெயிட் ஏப்ரிலியா மோட்டார்சைக்கிளான ஆர்.எஸ்457 இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற்ற பாரத் மோட்டோஜிபி பந்தயத்தின்போது ஆர்.எஸ்457 பைக்கின் இந்திய அறிமுகத்தை உறுதிச்செய்த ஏப்ரிலியா நிறுவனம், அதன்பின் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியன் பைக் வார கண்காட்சியில் ஆர்.எஸ்457 பைக்கின் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையை அறிவித்தது.
விலை குறைவான ஏப்ரிலியா பைக்குகளுள் ஒன்றாக கொண்டுவரப்படுவதால், ஆர்.எஸ்457 மீது எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய ஏப்ரிலியா பைக்கை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் எங்களது டிரைவ்ஸ்பார்க் குழுவுக்கு கிடைத்தது. இதன் மூலமாக, இந்த பைக்கை பற்றி நிறைய விஷயங்களை தெரிந்துக் கொண்டோம். அவற்றை முழு பைக் விமர்சனமாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டிசைன் & வசதிகள்: ஏப்ரிலியா ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரிசையில் புதிய விலை குறைவான மிடில்வெயிட் மோட்டார்சைக்கிளாக ஆர்.எஸ்457 களமிறக்கப்பட்டுள்ளது. ஏப்ரிலியா ஆர்.எஸ் பைக்குகளுக்கு என்றே ஓர் தனி டிசைன் ஃபார்முலா பின்பற்றப்படுகிறது. இதனை நீங்கள் ஆர்.எஸ்660 மற்றும் ஆர்.எஸ்.வி4 என விலைமிக்க ஏப்ரிலியா ஆர்.எஸ் பைக்குகளில் தெளிவாக காணலாம். அதே ஃபார்முலாவை தற்போது ஆர்.எஸ்457 பைக்கிலும் ஏப்ரிலியா நிறுவனம் பின்பற்றி உள்ளது.
இதன் காரணமாக, ஏப்ரிலியா ஆர்.எஸ்660 பைக்கின் பேபி வெர்சனாக புதிய ஆர்.எஸ்457 காட்சியளிக்கிறது. ஆர்.எஸ்457 பைக்கின் முன்பக்கத்தில் ட்ரிபிள் எல்இடி ஹெட்லைட் செட்-அப்பை காணலாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள எல்இடி டி.ஆர்.எல்-கள் டர்ன் இண்டிகேட்டர்களாகவும் செயல்படும். இதனால், முன்பக்கத்தில் இருந்து பார்த்தால், காம்பெக்ட்டான ஆர்.எஸ் பைக்காக ஆர்.எஸ்457 காட்சியளிக்கிறது.
ஹெட்லைட் செட்-அப்புக்கு கீழே என்ஜினை குளிர வைப்பதற்கான காற்று நுழையும் துளைகள் உள்ளன. அலுமினியம் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்457 பைக் அதன் டபுள் ஃபேரின் செட்-அப்பினால் மிகவும் ஏரோடைனாமிக்ஸுக்கு ஏற்றதாக உள்ளது. அதாவது, எதிர்காற்றிலும் பைக் சிறப்பாக நுழைந்து, பெரிய தடையின்றி செல்லும்.
இதற்கேற்றவாறு, பைக்கின் பெட்ரோல் டேங்கும் நன்கு ஷார்ப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் சைலன்சர் அண்டர்பெல்லியாக, சிறிய அளவில் பைக்கிற்கு அடியில் வழங்கப்பட்டுள்ளது. இருக்கை செட்-அப் ஆனது இரண்டாக பிரிக்கப்பட்டதாக உள்ளது. அதாவது, ரைடருக்கு ஒரு இருக்கையும், பின் இருக்கை பயணிக்கு ஒரு இருக்கையும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.
ரைடர் இருக்கையை காட்டிலும் பின் இருக்கை நன்கு உயரமாக வழங்கப்பட்டுள்ளதால், ஆர்.எஸ்457 பைக்கிற்கு ரேஸ் பைக்கிற்கான லுக் கிடைத்துள்ளது. அதேபோல், பைக்கின் பின் இறுதிமுனை நறுக்கப்பட்டதுபோல் நன்கு ஷார்ட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பின் இருக்கையில் அமருபவர் ரைடரை நோக்கி கொஞ்சம் சாய்ந்தப்படி அமர வேண்டியதாக உள்ளது. பைக்கின் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ஆர்.எஸ்457 பைக்கை பிரிஸ்மேட்டிக் டார்க் (Prismatic Dark), ஒபாலெசெண்ட் வெள்ளை (Opalescent White) மற்றும் ரேசிங் ஸ்ட்ரிப்ஸ் (Racing Stripes) என மொத்த 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் ஆர்.எஸ்457 பைக்கை வாங்கலாம். இதில் முதல் 2 பெயிண்ட் ஆப்ஷன்களில் சிவப்பு நிறத்தில் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. அதேநேரம், ரேசிங் ஸ்ட்ரிப்ஸ் பெயிண்ட் ஆப்ஷனில் மட்டும் கருப்பு நிறத்தில் சக்கரங்கள் சிவப்பு நிற ரிம்களுடன் கிடைக்கும்.
தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், 5-இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்பிளேவை புதிய ஆர்.எஸ்457 பைக் கொண்டுள்ளது. ப்ளூடூத் மூலமாக இந்த டிஸ்பிளேவை மொபைல் போன் உடன் இணைத்துக் கொள்ளலாம். பைக்கின் ஹேண்டில்பாரில் வழங்கப்பட்டுள்ள ஒளிரக்கூடிய கண்ட்ரோல் பொத்தான்கள் மூலமாகவே டிஎஃப்டி டிஸ்பிளேவை கண்ட்ரோல் செய்யலாம். இந்த டிஸ்பிளே மூலமாக ரைடிங் மோட் மற்றும் பயணிக்கும் கியரில் இருந்து பைக்கின் வேகம், கடந்துவந்த தூரம் என எல்லா விபரங்களையும் பெறலாம்.
இயந்திர பாகங்கள் & பரிமாண அளவுகள்: ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கில் புதிய 457சிசி இணையான இரட்டை-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யுடு-கூல்டு, 4-வால்வு என்ஜினான இதில் ட்யூயல்-ஓவர்ஹெட் காம்ஷாஃப்ட்ஸ் மற்றும் ஃபார்வேர்ட்-ரேசிங் சிலிண்டர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் மூலமாக, இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 9,400 ஆர்பிஎம்-இல் 46.93 பிஎச்பி மற்றும் 6,700 ஆர்பிஎம்-இல் 43.5 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கியர்களை விரைவாக மாற்ற வசதியாக குயிக்ஷிஃப்டரையும் கூடுதல் ஆப்ஷனாக ஏப்ரிலியா வழங்குகிறது. இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ள ரைடு-பை-வயர் சிஸ்டம் 3 விதமான ரைடிங் மோடுக்கு வழிவகுக்கிறது. அதேபோல், 4 விதமான டிராக்ஷன் கண்ட்ரோல் மோட்களும் இந்த பைக்கில் உள்ளன. இதில், ஒரு மோடில் டிராக்ஷன் கண்ட்ரோலை முழுவதுமாக அணைத்து வைக்கவும் முடியும்.
ட்வின்-ஸ்பார் அலுமினியம் ஃப்ரேம் செட்-அப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஏப்ரிலியா ஆர்.எஸ்457 பைக் அதன் இதய பகுதியான என்ஜினை இயக்கத்தின்போது அழுத்தத்திற்கு உள்ளாக்குவதை பயணத்தின்போது உணர முடிகிறது. சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் 41மிமீ தலைக்கீழான ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.