ராஜமவுலியின் 1000 கோடி படத்தின் புதிய அப்டேட் இதோ!
ஆந்திராவில் மட்டும் அறியப்பட்ட ராஜமவுலி என்ற பெயர் நான் ஈ படத்துக்குப் பிறகு இந்தியா முழுவதும் உச்சரிக்கப்படும் பெயராக மாறியது. ஈயை மையப்படுத்தி ராஜமவுலி எடுத்திருந்த அப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அனைத்து மொழிகளிலும் சூப்பர்ஹிட்டானது.
பாகுபலி 1 மற்றும் 2 பாகங்கள் ராஜமவுலிக்கு அழியாத பெயரை சம்பாதித்துத் தந்தன. தெலுங்கில் தயாரான இப்படம், தமிழ் உள்பட பல மொழிகளில் முந்தைய வசூல் சாதனைகளை உடைத்து, உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. அடுத்து ராம் சரண், ஜுனியர் என்டிஆரை வைத்து எடுத்த ஆர்ஆர்ஆர் திரைப்படமும் 1000 கோடி வசூலை கடந்தது. அதன் பாடல் படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆஸ்கர் விருதையும் பெற்றுத் தந்தது.
ராஜமவுலி அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதனை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் இன்டியானா ஜோன்ஸ் சீரிஸைப் போல நகைச்சுவை கலந்த ஆக்ஷன் அட்வென்ஜராக எடுக்க திட்டமிட்டுள்ளார். ஒன்றுக்கு மேற்பட்ட பாகங்களாக இது வர உள்ளது. அனைத்துப் பாகங்களின் மொத்த பட்ஜெட் 1000 கோடிகள் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இந்தோனேஷியாவின் இளம் முன்னணி நடிகை செல்ஸி இஸ்லான் நடிக்கிறார். அவரை வைத்து போட்டோஷுட் நடத்தியுள்ளார் ராஜமவுலி. இதன் மூலம், இந்த புதிய புராஜெக்ட் சர்வதேச கதையை கொண்டதாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது.
அவரது முந்தையப் படங்களைப் போல சில நடிகர்களை இந்திப் படவுலகிலிருந்து தேர்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் விரைவில் மும்பை செல்ல உள்ளார் என ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகேஷ் பாபு நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியான படங்கள் ரசிகர்களுக்கு முழுத்திருப்தியை தரவில்லை. சங்கராந்தியை முன்னிட்டு வெளியான குண்டூர் காரமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற தவறியது. ராஜமவுலியின் படத்தையே அவர்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். தற்போது ராஜமவுலி படத்தின் ஃப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.