வேலை கிடைக்க வேண்டுமா? – உங்களுக்கு அருள்புாிய காத்திருக்கிறார் விக்கிரம பாண்டீஸ்வரா்!
வியாபாரம் செழிக்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்பது எல்லோருடைய கனவு, ஆசை. ஆனால், அது எல்லோருக்கும் சாியான நேரத்தில் நிறைவேறுவது இல்லை. இருப்பினும் சுமாா் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் உள்ள விக்கிரம பாண்டீஸ்வரரை வழிபட்டால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள். இந்த கோயில் எங்கே அமைந்துள்ளது, அதன் வரலாறு என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளைத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் சுமாா் 9 கி.மீ தொலைவில் உள்ள சோழபுரத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சிவன் கோயில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிய மன்னர்களால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. வெளிநாட்டினா் இங்குள்ள வணிகர்களிடம் வியாபாரம் செய்தாா்கள் என்பதற்கு அடையாளமாக இங்குள்ள ஆற்றங்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட நாணயங்கள் மூலம் தெரியவருகிறது.
இந்த ஆற்றங்கரையோரத்தில் தான் சிவன், விஷ்ணுவிற்கு பழமையான கோயில்கள் உள்ளன. இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் மாறவா்ம விக்கிரம பாண்டியா். அவருடைய நினைவாக இக்கோயிலில் உள்ள மூலவருக்கு விக்கிரம பாண்டீஸ்வரர் என பெயர் வைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனேனில் இக்கோயிலில் உள்ள சிவபெருமானின் பெயரும் விக்கிரம பாண்டீஸ்வரா் என்பதாகும்.
பெரிய கோபுர அமைப்புகள் இல்லாமல் கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலில் குழல்வாய்மொழி என்ற பெயரில் சுவாமிக்கு வலதுபுறத்தில் அம்பாளுக்கு தனிக்கோயில் உள்ளது. இந்த அம்மன் சன்னதிக்கு வலது புறத்தில் இங்கு வாழ்ந்த மகாதேவ சித்தா் பீடம் உள்ளது. கோயிலுக்கு பின்புறம் கன்னி மூலையில் பெருமாள் கோயிலும் உள்ளது. இங்கு தேவி, பூதேவியுடன் விண்ணகர பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவர் சன்னதியில் மனம் முருக வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கருடாழ்வாா், நம்மாழ்வாா், பெரியாழ்வாா், ராமானுஜர் சன்னதிகளும் உள்ளன. சண்டிகேஸ்வரா், பைரவா், சூரியன், சந்திரனுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பா், திருஞானசம்பந்தா், சுந்தரா் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோருக்கும் சிலைகள் உள்ளன. மேலும், கோயிலின் உட்புறத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சிற்பங்கள், தூண்கள் என அழகு நிறைந்த இந்த சிவாலயத்தில் உள்ள சுவாமிக்கு தொடா்ந்து பச்சாிசி மாவால் 48 நாட்கள் அபிஷேகம் செய்து வழிபட்டால் வேலை கிடைக்கும், வியாபாரம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
சுமாா் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் வீற்றிருக்கும் சிவபெருமானின் ஆசிபெற்று தொடங்கும் புதிய தொழில் அமோகமாக இருக்கிறது என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள். கோயிலின் உட்புறத்தில் நிறைய அழகிய சிற்பங்களும் உள்ளன.