நடிகர் போண்டா மணி திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
தமிழ் சினிமாவில் பிரபல நகைச் சுவை நடிகரான போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். ரஜினிகாந்தின் முத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டா மணி தலைகாட்டி இருந்தாலும், விவேக்குடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க தொடங்கிய பிறகு, தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
வடிவேலுவுடனும் இணைந்து, வின்னர், வசீகரா, சச்சின் போன்ற படங்களிலும் காமெடியில் கலக்கினார். குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில் போலீஸ் வந்து அடித்து கேட்டாலும் சொல்லாதீங்க என வடிவேலுவிடம் இவர் கூறும் காட்சி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வந்த போண்டா மணி, கொரோனா காலத்தில் சிறுநீரக பிரச்னையால் அவதியுற்றார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர், தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். இதையடுத்து, ஒருசில படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்தவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர் போண்டா மணியின் உடல், சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் போண்டா மணியின் மறைவுக்கு திரைத்துரையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அத்துடன், போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.