Obesity Issue : அதிகரித்து வரும் தொற்றா நோய்கள் – பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் வருமா?

அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-processed High Fat Sugar Salt-HFSS food) அதிகம் நாம் பயன்படுத்தும்போது கொழுப்பு, சர்க்கரை, உப்புச் சத்துகள் உடம்பில் அதிகமாகி எடைபருமன் (Obesity), சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாகி, பாதிப்புகள் மற்றும் இறப்புகள் உயர்ந்து வருவது ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

2019, உலக வங்கியின் அறிக்கையில், அதிக எடை மற்றும் தொப்பை (Obesity) பாதித்த 70 சதவீதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாட்டினர் மத்தியில் இருப்பதும், கிராமப்புற மக்கள் மத்தியில் இந்த பாதிப்புகள் 55 சதவீதம் அதிகமாக இருப்பதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

1990களில் தொற்றா நோய்களின் பாதிப்பு இந்தியாவில் 38 சதவீதம் இருந்த நிலையில், 2019ல் அது 65 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் உணவு முறை மாற்றங்களால், ஆண்டுதோறும் 12 லட்சம் இறப்புகள் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக எடை மற்றும் தொப்பை பாதிப்பின் காரணமாக 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 23 பில்லியன் டாலர்.

தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லையெனில் 2060ல் அது 480 பில்லியன் டாலர்களாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுத் தொழில் இந்தியாவில் 2011-21 இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு13.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

2022ல் இந்தியா தான் அதிக சர்க்கரையை (Sugar) உற்பத்தி செய்ததோடு, அதை அதிகமாக பயன்படுத்தியும் வந்துள்ளது.

இந்தியாவில் அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் உண்ணும் தரத்தில் உள்ள 50-60 சதவீதம் சர்க்கரை, உப்பு, கொழுப்பு உணவுகள் அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவு தொழிற்நிறுவனங்கள் கைக்கு சென்று விடுகின்றன.

அதிதீவிர பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, கொழுப்பு, உப்பு உணவுகள் (HFSS) அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகள், மென் குளிர்பானங்களின் பயன்பாடு கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்து, அதன் சந்தை மதிப்பு கடந்தாண்டில் மட்டும் 30 பில்லியன் டாலரைத் தாண்டி நிற்கிறது.

இந்த உணவு முறை மாற்றம் சுகாதாரத்திற்கு நல்லதல்ல.

இத்தகைய அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் பயன்பாட்டால், தொற்றா நோய்கள் பல்கிப் பெருகுவதுடன், மக்களின், நாட்டின் பொருளாதார பாதிப்பு அதிகமாவதுடன், நாட்டின் உற்பத்தித் திறனும் குறைவதால், நாடுகள் உடனடியாக இந்தப் போக்கைத் தடுக்க நடவடிக்கைகள் பல எடுத்து வருகின்றன.

இத்தகைய அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மீதான வரியை அதிகப்படுத்துவதால், அதன் பயன்பாடு மக்கள் மத்தியில் குறைந்து வருவது ஆய்வுகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

60 நாடுகளில் சர்க்கரை அதிகமான குளிர் பானங்களுக்கான (Sugar-sweetened Bevarages-SSB) வரியை அதிகப்படுத்தியதால் அதன் பயன்பாடு சற்று குறைந்துள்ளது.

ஆனால் High Fat Sugar Salt (HFSS) உணவுகளை பொறுத்தமட்டில், டென்மார்க், பிரான்ஸ், ஹங்கேரி, மெக்சிகோ, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற 16 நாடுகளில், அதன் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் கொலம்பியாவில் கொண்டுவரப்பட்ட துரித உணவு சட்டங்கள் மற்ற நாடுகளுக்கும் பாடமாக அமைய வேண்டும். அதி தீவிர பதப்படுத்தப்பட்ட உணவு பயன்பாட்டைக் குறைக்க அவை பெருமளவு உதவி செய்யும்.

இந்தியாவில், கேரளாவில் மட்டும் 2016ல் கொண்டுவரப்பட்ட கொழுப்பு பொருட்கள் மீதான அதிக வரி, 2017ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட GST சட்டத்தால் கரைந்து போனது.

அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒரு சமுதாயம் அதிகமாக உண்ணும்போது, நோய்கள் பல்கிப் பெருகி மக்கள், நாடுகள் சுகாதாரத்திற்கு அதிகம் செலவிடும் சூழலுக்கு தள்ளப்படுவதால், அத்தகைய பொருட்களின் பயன்பாட்டை மக்களிடம் குறைக்க, அதிக வரி அப்பொருட்களின் மீது போடுவது, தேர்ந்தெடுப்பு குறைந்து, பலனை அளித்துள்ளது.

உணவுப் பொருட்களால் பெறப்படும் சத்துணவின் (Nutritive value) அளவை கருத்தில்கொண்டு, சத்துணவு அளிக்கும் உணவுகளுக்கான வரியைக் கணிசமாகக் குறைத்தும், நோய்களை அதிகம் ஏற்படுத்தும் அதிதீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் மீது கடுமையான வரிகளை விதித்தும், அரசு தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வருவது இன்றைய உடனடித் தேவையாக உள்ளதால், மக்கள் நலன்கருதி அரசுகள் இதை விரைந்து நடைமுறைப்படுத்த முன்வந்தால் மட்டுமே, தொற்றா நோய்களின் பாதிப்பு மற்றும் இறப்பிலிருந்து மக்களை காக்க முடியும்.

உணவு சார்ந்த தொழில் நிறுவனங்களும், அதிக வரியிலிருந்து தப்பிக்க சத்துணவு தரும் உணவுகளை அதிகம் உற்பத்தி செய்து, அவற்றை விற்க முன்வரும். அரசு செவிசாய்க்குமா? என்று மருத்துவர் புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *