250 ஐட்டங்களுடன் மருமகனுக்கு மறக்க முடியாத சங்கராந்தி விருந்து.. அசத்திய மாமியார்
திருப்பதி: ஆந்திராவில் புதிய மருமகனுக்கு 250 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்தி இருக்கிறது அவரது மாமியார் குடும்பம்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களை பொறுத்தவரை, மிக விஷேசமான பண்டிகை என்றால் அது சங்கராந்தி தான். நமது ஊரில் வழிபடும் பொங்கல் திருவிழாவை சில சில மாற்றங்களுடன் அப்படியே அவர்களும் கொண்டாடுவார்கள். தீபாவளி, விஜயதசமியை விடவும் முக்கியமான பண்டிகை என்றால் அது சங்கராந்தி பண்டிகை தான். நமது ஊரில் மருமகன்களுக்கு தல தீபாவளி எப்படியோ அப்படித்தான் ஆந்திராவில் மருமகன்களுக்கு சங்கராந்தி பண்டிகை..
தெலுங்கு மக்கள் எங்கே வேலை செய்து வந்தாலும், சங்கராந்தி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போய் விடுவார்கள். சங்கராந்தி பண்டிகையின் போது, புதியதாக திருமணம் ஆனவர்களுக்கு மருவீட்டு விருந்து அற்புதமாக இருக்கும். குறிப்பபாக மகளுடன் வரும் மருமகனை, மாமியாரும், மாமனாரும், மைத்துனரும் கவனிக்கும் விதமே அலாதியானது. நமது ஊர்களில் பொங்கல் சீர் எடுத்து மருமகனின் வீட்டிற்கு போய் கொடுப்பார்கள் என்றால், ஆந்திராவில் மருமகனை மகளுடன் அழைந்து வந்து சங்கராந்தி விருந்து படைப்பார்கள்.
அதற்கான உதாரணங்களை கடந்த சில வருடங்களாக நீங்களே பல வீடியோக்கள் பார்த்திருப்பீர்கள்.. 100 வகை பதார்த்தங்களை மருமகனுக்கு விருந்து வைத்த மாமியார், 150 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்திய மாமியார், 200 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்திய மாமியார் குடும்பம் என பல வீடியோக்கள் இணையத்தில் இன்றும் இருக்கிறது. மருமகனை அந்த அளவிற்கு கவனிப்பார்கள்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஒரு மாமியார் தனது மருமகனுக்கு 250 வகையான உணவுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தி அசத்தி உள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சங்கராந்தி விழா போகி பண்டிகை தொடங்கியதில் இருந்து கோலாகலமாக நடந்து வருகிறது. சங்கராந்தி விழா மொத்தம் 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. போகியுடன் தொடங்கிய சங்கராந்தி விழா காணும் பொங்கலுடன் ஆந்திராவில் நிறைவடைந்தது. மக்கள் சங்கராந்தியை பக்தியுடன் கொண்டாடி விலங்குகளை வணங்குவார்கள். குறிப்பாக கிராமங்களில் மாடுகள் சேவல்களை வைத்து மிகவும் பிரபலமான விளையாட்டு போட்டிகள் நடக்கும்.
கடந்த ஆண்டு சங்கராந்தியின் போது புதுமாப்பிள்ளைக்கு (மருமகனுக்கு ) அளித்த அமோக விருந்தோம்பலை கோதாவரி மாவட்ட மக்கள் இன்னும் மறக்கவில்லை. கடந்த ஆண்டு, சங்கராந்திக்கு வீட்டுக்கு வந்த மருமகனுக்கு, 173 வகை பதார்த்தங்களை பரிமாறி அசத்தினார் ஒரு மாமியார்.