மின் கட்டண உயர்வு: விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த தொழில் துறையினர் முடிவு
கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விரைவில் அடுத்தகட்ட போராட்டம் நடத்த உள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைக் கட்டண உயர்வை திரும்ப பெறுதல், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டண முறையை நீக்குதல், மேற்கூரை சூரிய ஒளி ஆற்றல் உற்பத்தி திட்டங்களுக்கு விதிக்கப்படும் நெட் வொர்க் கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தொழில் துறையினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இருப்பினும் தமிழக அரசு சார்பில் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் தொழில் துறையினர் அதிருப்தி யடைந்துள்ளனர்.
தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் ( டேக்ட் ) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கருத்து கேட்பு கூட்டங்களில் கடும் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட போதும் தமிழக அரசு மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதுவரை எம்எஸ்எம்இ தொழில் துறைக்கு அமல்படுத்தப்படாத உச்ச பயன்பாட்டு நேர மின் கட்ணம் உள்ளிட்ட புதிய நடைமுறை தொழில் முனைவோரை கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம், கதவடைப்பு, மனித சங்கிலி, அஞ்சல் அட்டை அனுப்புதல் உள்ளிட்ட 8-கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் மின் கட்டண மதிப்பீடு மீட்டர் பொருத்தும் வரை உச்ச பயன்பாட்டு நேர மின் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு உள்ளிட்ட சில அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. மற்ற கோரிக்கைகள் ஏற்கப்படாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் பொறுப்பேற் பதற்கு முன் எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார். தற்போது தொழில் முனைவோரிடம் கேட்காமல், அரசு அதிகாரிகள் கூறுவதை கேட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். மின்கட்டண உயர்வு திரும்ப பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.