போண்டா மணி பெயர் வந்தது எப்படி? உண்மையான பெயர் என்ன தெரியுமா?
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர். இவர், 1991 ஆம் ஆண்டு பாக்யராஜின் பவுனு பவுனுதான் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.
ரஜினிகாந்தின் முத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் போண்டா மணி தலைகாட்டி இருந்தாலும், விவேக்குடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடிக்க தொடங்கிய பிறகு, தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
வடிவேலுவுடனும் இணைந்து, வின்னர், வசீகரா, சச்சின் போன்ற படங்களிலும் காமெடியில் கலக்கினார். குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில் போலீஸ் வந்து அடித்து கேட்டாலும் சொல்லாதீங்க என்ற வசனம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது.
கடைசியாக இந்த ஆண்டு வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த வா வரலாம் வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இலங்கையில் இருந்து சினிமா கனவுடன் சென்னைக்கு வந்த கேத்தீஸ்வரன் தினமும் பசிக்கு சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு காசு இல்லாத நிலையில், ஒரு போண்டாவை வாங்கிக் கொண்டு அதையே உணவாக பல நாட்கள் தின்று வாழ்ந்து வந்துள்ளார்.
சினிமாவில் இவர் அறிமுகம் ஆகும் போது, கேத்தீஸ்வரன் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என சொல்லும் போது தனது குருநாதர் கவுண்டமணி எப்படி தனது பெயரை கவுன்ட்டர் மணி என மாற்றிக் கொண்டாரோ அதே போல போண்டா மணி என மாற்றிக் கொள்வோம் என மாற்றிக் கொண்டார்.
போண்டா மணி மருத்துவமனையிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், பலரும் உதவி செய்ய முன் வந்தனர். குணமடைந்து வீடு திரும்பி விட்டார் என எதிர்பார்க்கப்பட்டு வந்து நிலையில், திடீரென அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.