பொங்கல் திருநாளில் இப்படி சம்பவத்தை கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சு.. முதல்வர் வேதனையோடு நிவாரணம் அறிவிப்பு.!

நீலகிரி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு-1 கிராமம், மழவன் சேரம்பாடி என்ற இடத்தில் கடந்த 15.01.2024 அன்று மாலை கூடலூர்- அய்யன்கொல்லி வழிதடத்தில் 20 பயணிகளுடன் பயணம் செய்த TN-43-N-0779 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்து மழவன் சேரம்பாடி பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள மின்கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில், மின்கம்பி அறுந்து விழுந்ததில், மேற்படி பேருந்து ஓட்டுநர் நாகராஜ் (49) த/பெ.சதாசிவம் மற்றும் பேருந்தில் பயணம் செய்த சேரங்கோடு-1 கிராமம், பூஞ்சக்கொல்லி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (51) த/பெ.பாலசந்திரன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

நாகராஜ் மற்றும் பாலாஜி ஆகிய இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *