ஆயுர்வேத பீடியா…? மகேஷ் பாபுவை கலாய்த்த ரசிகர்கள்
சங்கராந்தியை முன்னிட்டு சென்றவாரம் மகேஷ் பாபு நடித்த குண்டூர் காரம் படம் வெளியானது. பல பம்பர்ஹிட் படங்களை தந்த த்ரிவிக்ரம் இயக்கம் என்பதால் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஒரு கமர்ஷியல் விருந்துக்கு தயாராக இருந்தனர்.
குண்டூர் காரத்தில் குண்டூரில் மிளகாய் மண்டி வைத்திருக்கும் சத்யம் என்ற கதாபாத்திரத்தில் ஜெயராம் நடித்திருந்தார். அவரது மகன் வெங்கட் ரமணா. ஒரு அடிதடி வழக்கில் அவர் உள்ளே செல்ல, சத்யத்தின் மனைவி வசுந்தரா கணவனிடம் கோபித்துக் கொண்டு தந்தை வெங்கட சுவாமியின் வீட்டிற்குச் செல்கிறார். வெங்கட சுவாமி மகள் வசுந்தராவுக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பதுடன், அவரை மந்திரியாகவும் ஆக்குகிறார். மந்திரி அம்மாவுக்கும், டோன்ட்கேர் மகனுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை.
இதில் வெங்கட ரமணாவாக மகேஷ் பாபுவும், வசுந்தராவாக ரம்யா கிருஷ்ணனும், வெங்கட சுவாமியாக பிரகாஷ்ராஜும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் விளம்பரங்களில் மகேஷ் பாபு பீடி புகைக்கும் படங்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை பிரதானப்படுத்தியே விளம்பரங்களும் செய்யப்பட்டன. படத்திலும் மகேஷ் பாபு தாராளமாக பீடி ஊதித்தள்ளுகிறார்.
இது சர்ச்சையான நிலையில், விளக்கம் ஒன்றை அளித்தார். “ஒரிஜினல் பீடியை பயன்படுத்திய போது எனக்கு தலைவலி வந்துவிட்டது. அதனால், லவங்க இலையில் செய்த ஆயுர்வேத பீடியை பயன்படுத்தினேன். அது எந்தத் தொந்தரவும் செய்யவில்லை. நான் புகைப்பிடிக்கவும் மாட்டேன், அதை ஊக்கப்படுத்தவும் மாட்டேன்” என்றார்.
புகையிலை இலையோ, லவங்க இலையோ… பீடி பீடிதான். மகேஷ்பாபுவின் ரசிகர்களுக்கு அவரைப் போல் லவங்க பீடி கிடைக்குமா? அவர்கள் சாதாரண பீடியைத்தான் பயன்படுத்தப் போகிறார்கள். மகேஷ்பாபு படத்தில் பீடியே புகைக்காமல் இருந்திருக்கலாம். அல்லது இப்படியொரு விளக்கத்தை தராமலாவது இருந்திருக்கலாம் என அவரது ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர்.