அதிர்ச்சி… மஞ்சுவிரட்டில் 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலியான சோகம்!
தை மாதத்தின் மூன்றாம் நாளில் நடத்தப்படும் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டி இன்று காலை தொடங்கியதையொட்டி , கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. கிராம மக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு சென்று, மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
அதன்பின்னர் முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் மஞ்சுவிரட்டு தொடங்கியது. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட நிலையில், இதனைக் காண ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்துள்ளனர். இந்த போட்டியில் 271 காளைகள் பங்கேற்றன. 81 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்ட இந்த விளையாட்டிற்கு சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக அசம்பாவித சம்பவம் நடந்தது.
வலையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கர் (13) தனது நண்பர்களுடன் மஞ்சுவிரட்டு காண்பதற்காக வந்திருந்தான். அப்போது மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று அவ்வழியாக ஓடிவந்தபோது அங்கிருந்த சிறுவன் பாஸ்கரை முட்டியது. இதில் நெஞ்சுப் பகுதியில் காயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவகங்கை மருத்துவமனைக்கு சிறுவனின் உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு காண வந்த சிறுவன் மாடு முட்டி பலியாகியுள்ள சம்பவம் சிராவயல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று, அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.