சிவகார்த்திகேயன் சம்பள பாக்கி விவகாரம்.. ஞானவேல் ராஜா மீது போட்ட வழக்கு என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படம் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்த படத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் படத்தின் புரமோஷன் பேட்டியில் கூறியிருந்தார்.
ஆனால், ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் தனக்கு சரியான சம்பளத்தை கொடுக்கவில்லை என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் வழக்கு தொடுத்திருந்தார்.
பெரிய ஃபிளாப்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கர் உள்ளிட்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா அந்த படத்தை தயாரித்திருந்தார்.
சம்பள பாக்கி: மிஸ்டர் லோக்கல் படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது என்றும் 11 கோடி ரூபாய் மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்தார் என்றும் பாக்கியுள்ள 4 கோடி ரூபாயை அவர் தரவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். பல ஆண்டுகளாக அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி அந்த வழக்கை முடித்து வைத்துள்ளார்.
20 கோடி நஷ்டம்: ஞானவேல் ராஜா தனக்கு ஒப்பந்தப்படி சம்பளத்தை வழங்கவில்லை என சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தை நாடினார். பதில் மனு தாக்கல் செய்த ஞானவேல் ராஜா 12 கோடியே 78 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறேன் என்றும் சிவகார்த்திகேயனின் பிடிவாதத்தால் ராஜேஷை அந்த படத்தில் இயக்குநராக போட்டோம். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்து தனக்கு 20 கோடி வரை நஷ்டமாகிடுச்சு என ஞானவேல் ராஜா பேசியது பரபரப்பை அளித்தது.
வழக்கு என்ன ஆச்சு?: தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்து வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை மூலமாக சுமூகமாக இருவரும் சென்று விட்டதாகவும் சிவகார்த்திகேயன் அந்த வழக்கை வாபஸ் வாங்கிய நிலையில், 12.80 லட்சம் ரூபாயை சிவகார்த்திகேயன் வங்கி கணக்கிற்கு செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி முடித்து வைத்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.