2030ஆம் ஆண்டுக்குள் விபத்து மரணங்களை 50 சதவீதம் குறைக்க இலக்கு: நிதின் கட்கரி!
விபத்து மரணங்களை 2030ஆம் ஆண்டிற்குள் 50% அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு சாலைப் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
சாலைப் பாதுகாப்பு -இந்திய சாலைகள்@2030 பாதுகாப்பை அதிகரித்தல்’ என்ற தலைப்பில் இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய நிதின் கட்கரி, ‘சாலைப் பாதுகாப்பின் 4 அம்சங்கள் – பொறியியல் (சாலை, வாகனப் பொறியியல்) – அமலாக்கம் – கல்வி, அவசர மருத்துவ சேவையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு சமூக நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவது முக்கியம் என்று தெரிவித்தார். சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் அப்போது அவர் வலியுறுத்தினார்.
சாலை விபத்துகள் 2022 குறித்த சமீபத்திய அறிக்கையின்படி, 4.6 லட்சம் சாலை விபத்துகளில், 1.68 லட்சம் பேர் உயிரிழப்பு, 4 லட்சம் பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள், 19 உயிரிழப்புகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
சாலை விபத்துகள் 12 சதவீதமும், சாலை விபத்து உயிரிழப்புகள் 10 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14 சதவீத சமூகப் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நிதின் கட்கரி கூறினார். உயிரிழந்தவர்களில் 60% பேர் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் கூறினார். விபத்து மரணம் என்பது ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவரின் இழப்பு, உரிமையாளருக்குத் தொழில்முறை இழப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு ஒட்டுமொத்த இழப்பு என்று அவர் கூறினார்.
நாக்பூரில் நல்ல போக்குவரத்து நடத்தைக்கு வெகுமதி வழங்கும் முறை மக்களிடையே சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று நிதின் கட்கரி கூறினார். ஓட்டுநர்களுக்கு வழக்கமான கண் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெருநிறுவன சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக இதற்கான இலவச முகாம்களை நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப வழங்குநர்கள், ஐ.ஐ.டி, பல்கலைக்கழகங்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலை அதிகாரிகளுடனான ஒத்துழைப்பு ஆகியவை சாலைப் பாதுகாப்பிற்கு நல்ல நடைமுறைகளைப் பரப்புவதற்கான முன்னோக்கிய வழியாகும்.” என்று கூறினார்.