உலகின் சக்திவாய்ந்த கரன்சி எது? டாலருக்கே இந்த நிலைமையா? அப்ப இந்திய ரூபாயின் மதிப்பு எப்படி?
ஒவ்வொரு நாட்டிலும் கரன்சி எனப்படும் நாணயங்கள்தான் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் இருக்கிறது. நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிப்பதாகவும் உள்ளது. நாணயத்தின் வலிமை ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான நிதி ஆரோக்கியத்திற்கு ஒரு சான்றாகும்.
நாணயத்தின் மதிப்பு உயரும் போது, நாட்டின் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கையும் அதிகரிக்கிறது. அது முதலீடுகளை ஈர்த்து, சர்வதேச உறவுகளை வளர்க்கிறது. ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள 180 நாணயங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது. சில நாணயங்கள் பிரபலமானவையாகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவையாகவும் உள்ளன. இந்தக்க காரணங்களால் அவற்றின் மதிப்பு அல்லது வலிமையைத் தீர்மானிக்க முடியாது.
வலுவான நாணயம் நாட்டின் வாங்கும் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உலக அரங்கில் அந்நாட்டின் பொருளாதாரம் குறித்து நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு உறுதியாக இருக்கும் நாணயங்களில் முதலீட்டாளர்கள் அதிக முதலீடு செய்வார்கள்.
இந்நிலையில் ஃபோர்ப்ஸ் (Forbes) உலகின் வலிமையான 10 நாணயங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலில் இருப்பது குவைத் தினார். ஒரு குவைத் தினார் என்பது 270.23 ரூபாய் அல்லது 3.25 அமெரிக்க டாலருக்குச் சமம். அடுத்து வரும் பஹ்ரைன் தினாரின் மதிப்பு 220.4 ரூபாய் அல்லது 2.65 டாலர் ஆகும்.
ஓமன் நாட்டு ரியால் (ரூ. 215.84), ஜோர்டான் தினார் (ரூ.117.10), ஜிப்ரால்டர் பவுண்ட் (ரூ. 105.52), பிரிட்டிஷ் பவுண்டு (ரூ. 105.54) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அமெரிக்க டாலர் இந்தப் பட்டியலில் 10வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ.83.10 ஆக உள்ளது.
ஆனால், அமெரிக்க டாலர் தான் உலகளவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் நாணயம் என்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது. இருந்தாலும் இது உலகின் வலிமையான நாணயங்களில் 10வது இடத்தில்தான் உள்ளது.
குவைத் தினார் 1960ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து உலகின் மிகவும் மதிப்புமிக்க நாணயமாக உள்ளது. குவைத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையே இதற்குக் காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். குவைத்தில் உள்ள எண்ணெய் இருப்பு மற்றும் வரி விதிப்பு இல்லாத அரசமைப்பு ஆகியவையும் முக்கியமான காரணங்களாகச் சொல்லபடுகின்றன.
குவைத் தினார் தவிர, சுவிட்சர்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீனின் நாணயமான சுவிஸ் பிராங்க்கும் உலகின் மிகவும் நிலையான நாணயமாகக் கருதப்படுகிறது என ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஜனவரி 10, 2024 வரையிலான நாணய மதிப்புகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.