பிரதமர் மோடி 20ம் தேதி திருச்சி வருகிறார் – பாதுகாப்பு தீவிரம்..!

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கும் நிலையில் வரும் 20ம்தேதி சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி திருச்சி வருகிறார். தொடர்ந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் பிரதமர், காலை 11 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
அங்கு சுமார் அரை மணி நேரம் கோயிலில் இருக்கும் பிரதமர், கோயில் பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் விமான நிலையம் வரும் பிரதமர், அங்கு இருந்து மதுரை புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார். மறுநாள் காலை (21ம்தேதி) ராமநாத சாமி கோயிலில் தரிசனம் செய்து விட்டு புனிதநீர் எடுத்துக்கொண்டு அங்கு இருந்து நேரடியாக அயோத்தி செல்வார் என கூறப்படுகிறது.
பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்வீதி, திருவடிவீதி மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் வசிப்பவர்கள், கடைக்காரர்கள் பற்றிய விவரங்களை போலீசார் நேற்று முதல் சேகரிக்க தொடங்கினர். பிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் பகுதி முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது, விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கோயிலுக்குள் இயங்கி வரும் பொம்மை மற்றும் இரும்பு கடை உள்ளிட்ட கடைகளை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *