விடுமுறைக்காக சென்று உயிரை விட்ட இளைஞர்கள்!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை கணேசபுரம் பகுதியில் உள்ளது ஐந்து வீடு நீர்வீழ்ச்சி. நேற்று கொடைக்கானலை சேர்ந்த கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் நாசர் என்பவரது மகன் யாசின் (20), கார்த்திக் என்பவரது மகன் கோகுலகிருஷ்ணன் (20) உள்பட 5 பேர் இந்த அருவி பகுதிக்கு சென்றனர்.
அப்போது யாசின், கோகுல கிருஷ்ணன் இருவரும், திடீரென சுழலில் சிக்கி நீருக்குள் மூழ்கினர். இதை பார்த்த நண்பர்கள், அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்த மக்கள், ஓடி வந்து, 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.தகவலறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி மாயமான 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கொடைக்கானலில் மிகுந்த குளிர் நிலவி வருவதால் இருவரையும் தேடுவதில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை இருவரையும் தேடும் பணி துவங்கியது. சில மணி நேர போராட்டத்துக்கு பின் இருவரையும் சடலமாக மீட்டனர். இருவரது உடல்களும் ெகாடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே கொடைக்கானலில் உள்ள ஆபத்தான ஐந்து வீடு நீர்வீழ்ச்சியினை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.