நடிகர் தனுஷ் மீது வழக்கு பதிய கோரிய மனு தள்ளுபடி..!
2014ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த தனுஷ், திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர்கள் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனக்கோரி அலெக்சாண்டர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் போஸ்டரில் அவர் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற காட்சிகள் புகைபிடிப்பதை ஊக்குவிக்கிறது. இளம் வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஈர்க்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே தனுஷ் உள்ளிட்டோர் மீது வழக்குபதிய வேண்டும்’ என்று அந்த மனுவில் கோரப்பட்டது.
இம்மனு மீதான விசாரணைகள் முடிவுற்ற நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘திரைப்பட போஸ்டரில் இருப்பவருக்கும், புகைபிடிக்கும் பொருட்கள் அல்லது புகையிலை வர்த்தகத்துடன் எந்த தொடர்பும் இல்லை. மேலும் புகையிலை பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்துடன் தொடர்புடையவர்களால் இந்த போஸ்டர் ஒட்டப்படவில்லை.
எனவே புகையிலை பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிப்பதாக இதனை கருத முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.