குழந்தைகளுக்கு வலுசேர்க்கும் ஊட்டச்சத்து நிறைந்த ராகி ஓட்ஸ் லட்டு : ரெசிபி இதோ.!
பண்டிகை என்று வந்துவிட்டாலே வீட்டில் இனிப்புகளுக்கு பஞ்சமிருக்காது. வீடே இனிப்பு பலகாரங்களால் நிரம்பியிருக்கும்.
அதற்கு காரணம் சுவையான இனிப்புகளை போல் நமது வாழ்க்கையும் தித்திப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான்.
அப்படிப்பட்ட இனிப்புகளில் ஒன்று தான் ‘லட்டு’. அதுவும் லட்டு என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே குழந்தைகளுக்கு பிடித்த லட்டுவை பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ராகி, ஓட்ஸ், பேரிச்சம்பழம், பால் போன்ற பொருட்களை கொண்டு செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்.
இந்த ராகி ஓட்ஸ் லட்டானது குழந்தைகளுக்கு பிடித்த சுவையோடு ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் – 1 கப்
பூசணி விதைகள் – 2 டீஸ்பூன்
தர்பூசணி விதைகள் – 2 டீஸ்பூன்
ராகி மாவு – 1 கப்
சியா விதை தூள் – 2 டீஸ்பூன்
விதையில்லா பேரீச்சம்பழம் – 1 கப்
முந்திரி – தேவைக்கேற்ப
நெய் – 2 டீஸ்பூன்
பால் – ½ கப்
தேன் – ½ கப்
பச்சை ஏலக்காய் – 3
For Coating:
வறுத்த எள் – 2 டீஸ்பூன்
வறுத்த தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் ஓட்ஸ், பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், முந்திரி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.
மீண்டும் அதே கடாயை அடுப்பில் வைத்து ராகி மாவையும் பதமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வறுத்து வைத்துள்ள ஓட்ஸ், பூசணி விதைகள், தர்பூசணி விதைகள், சியா தூள், முந்திரி மற்றும் ஏலக்காய் சேர்த்து மென்மையான தூளாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு அதே மிக்ஸி ஜாரில் விதையில்லா பேரீச்சம்பழம் மற்றும் பால் சேர்த்து நன்கு பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் ராகி மாவு, ஓட்ஸ் தூள், பேரீச்சம்பம் பேஸ்ட் மற்றும் தேனை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறி விடவும்.
அவை அனைத்தையும் நன்கு கலந்து நன்கு சமைக்கவும்.
குறிப்பு : இடையில் அவற்றை நன்கு கிளறி விடவும்.
கலவை தயாரானதும் அடுப்பில் இருந்து இறக்கி அவற்றை நன்கு ஆறவைத்து லட்டுகளாக உருட்டவும்.
லட்டுகள் உருட்டியவுடன் வறுத்த எள் மற்றும் தேங்காயில் போட்டு நன்கு பிரட்டி எடுத்து பரிமாறவும்.