இன்று காலை சுடர் தொடர் ஓட்டத்தை துவக்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி!
திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் தமிழக அதிகனமழை காரணமாக இரண்டு முறை இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியில் கூடுதல் பொறுப்பு வந்த பிறகு நடைபெறும் மாநாடு என்பதால் இதை வெற்றி மாநாடாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டை ஒட்டி சென்னையில் இருந்து மாநாட்டு திடலுக்கு சுடர் தொடர் ஓட்டம் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. அண்ணா சாலை சிம்ஸ் சந்திப்பு அருகே காலை 7 மணி அளவில் நடைபெறும் சுடர் தொடர் ஓட்ட துவக்க நிகழ்ச்சியில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, சுடரை ஏற்றி வைத்து அதன் பயணத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த சுடர் ஓட்டம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் வழியாக பெத்தநாயக்கன்பாளையத்திற்கு 20ம் தேதி மதியம் 1:30 மணிக்கு சென்றடைகிறது.