விரைவில் ஜல்லிக்கட்டு லீக் போட்டி; வெற்றி பெற்றால் அரசு வேலை: அமைச்சர் உதயநிதி..!
அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி போட்டியான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த விழாவை காலை 7 மணிக்கு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முதலில் கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்க்கப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் 1000 காளைகளும், 600 வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பரிகளை வழங்கினார்
18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக்கு முதல் பரிசாக நிசான் மேக்னைட் கார் வழங்கப்பட்டது. இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடத்தை பிடித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது, ”ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை விதிக்க பல்வேறு அமைப்புகள் முயற்சி செய்தன. மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இது சரித்திர முக்கியத்துவன்ம் வாய்ந்த போட்டி.
ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் விதமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று ஜல்லிக்கட்டு லீக் போட்டியை நடத்த பரிசீலித்து வருகிறோம். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.மேலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.