திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி வெகு விமரிசையாக நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். இந்த விழாவையொட்டி பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களில் உள்ள வைணவ ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். அவர் நேற்று இன்று கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், வரும் 20ம் தேதி பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமரின் வருகையையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் (எஸ்பிஜி) ஸ்ரீரங்கம் வந்து ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்தில் உள்ள உள்வீதி, திருவடி வீதிகளில் உள்ள வீடுகளில் போலீசார் தீவிர சோதனையிட்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை கடந்த 2ம் தேதி பிரதமர் மோடி நேரில் வந்து திறந்து வைத்தார்.
இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இன்று முதல் 20ம் தேதி வரை ட்ரோன்களை பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார்.