நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19-ம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.
கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான பங்கேற்பதற்க வேண்டி அழைப்பிதழை பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் டெல்லியில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடியின் பயணத் திட்டங்கள் வெயியாகியுள்ளன.
19-ம் தேதி (நாளை) சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்து பின்னர் அன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் 20-ம் தேதி காலை திருச்சி புறப்பட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் காலை 10:00 மணியில் இருந்து 10:30 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார். திருச்சியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்கிறார். அன்று மாலை சிறப்பு பூஜையில் பங்கேற்று பின்னர் இரவு அவர் அங்கு தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் கோயில் சாமி தரிசனம் செய்து புனித நீராடி அந்த நீரை அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் எடுத்து செல்கிறார்.