சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சிராவயல் மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண உதவியையும் அறிவித்துள்ளார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஊராட்சியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

முதல்வரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

“சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சியில் நேற்று (17.01.2024) மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறும் இடத்திற்கு வெளியே நடைபெற்ற சம்பவத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் ஊராட்சி, மருதங்குடி கிராமத்தைச் சேர்ந்த முத்துமணி (வயது 32) த/பெ.முத்துராமன் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கே.வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் பாஸ்கரன் (வயது 12) த/பெ.லட்சுமணன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.”

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *