பொங்கல் விடுமுறை முடிந்து தலைநகரை நோக்கி படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துபோன சென்னை.!
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை தொடங்கி 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் வசிக்கும் மக்கள் அரசு மற்றும் தனியார் பேருந்து மற்றும் சொந்த வாகனங்கள் மூலம் வெள்ளிக்கிழமை முதல் தங்கள் சொந்த ஊருக்கு லட்சக்கணக்கான மக்கள் படையெடுத்தனர்.
இந்நிலையில், 5 நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் ஒரே நேரத்தில் ஆயிரக்காணக்கான வாகனங்களில் பொதுமக்கள் சென்னை திரும்பி வருகின்றனர். இதன் காரணமான நேற்று இரவு முதல் திண்டிவனம், பரனூர் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
குறிப்பாக செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலும், பெருங்களத்தூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பலரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.