ராமர் கோயில் திறப்பிற்கு எதிர்ப்பு இல்லை.!மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதில் தான் உடன்பாடு இல்லை-உதயநிதி
சேலத்தில் திமுக இளைஞர் அணி மாநாடு வருகிற 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணாசாலையில் இருந்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மழை வெள்ள பாதிப்பு காரணமாகவும், தென் மாவட்ட வெள்ள பாதிப்பாகவும் இரண்டு முறை இளைஞர் அணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டு வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 3 முதல் 4 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 வேளைகளும் உணவு வழங்கப்படவுள்ளது. இங்கு தொடங்கிவைக்கப்பட்ட சுடரை முதலமைச்சர் ஸ்டாலினிடம் சேலத்தில் வழங்கப்படவுள்ளது. மாநாட்டிற்கான கொடியை கனிமொழி ஏற்றிவைக்கிறார்.
நீட்டுக்கு எதிராக 85 லட்சம் கையெழுத்து
21ஆம் தேதி மாலை 4 மணிக்கு நானும், முதலமைச்சர் 5 மணிக்கு சிறப்புரையாற்றவுள்ளார். கூடி கலைந்த கூட்டம் அல்ல, கொள்ளை கூட்டம் என்பதை நிரூபிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னெடுப்பாக இளைஞர் அணி மாநாடு இருக்கும், 9 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் இழக்கப்பட்ட உரிமைகளை மீட்கும் வகையில் மாநாடு இருக்கும். நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து வாங்க திட்டமிட்டோம். தற்போது வரை 85 லட்சம் வகையெழுத்து வாங்கியுள்ளோம். திமுக இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சரிடம் வழங்கவுள்ளோம், இதனை தொடர்ந்து குடியரசு தலைவரிடம் நானே நேரில் சென்று வழங்க இருக்கிறோம்.
ராமர் கோயில் திறப்பு விழா
ராமர் கோயில் செல்வது அவர்கள்,அவர்கள் விருப்பம் இதனை அரசியலாக்க பார்க்க கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர்கள் விருப்பம், கர சவேக்கு எல்லாம் ஆட்கள் அனுப்பினார்கள். கலைஞர் ஏற்கனவே சொல்லியுள்ளார். ராமர் கோயில் திறப்பிற்கோ, அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிர்ப்பு இல்லை.அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டியதால்தான் அதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை.
ஏற்கனவே டி.ஆர்.பாலு ஆன்மிகத்தையும் அரசியலையும் ஒன்றுபடுத்த வேண்டாம் என கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி கால் வலி காரணமாக ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்த கேள்விக்கு, அவர் தவிழ்ந்து தவிழ்ந்து போவதால் அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது என விமர்சித்தார்.