ஆந்திராவில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை: முதல்வர் ஜெகன் நாளை திறந்து வைக்கிறார்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய புரட்சியாளர் டாக்டர். பி. ஆர். அம்பேத்கரின் 206 அடி உயர சிலை, விஜயவாடாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதானத்தில் ஜனவரி 19ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
புதன்கிழமை இந்தச் சிலையின் திறப்பு விழாவுக்கு மக்களை அழைத்த ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அனைவரும் தானாக முன்வந்து கலந்துகொள்ளுமாறு கோரினார். அம்பேத்கரின் இந்தச் சிலை ‘சமூக நீதியின் சிலை’ என்று குறிப்பிட்ண அவர், இது மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கே சிறப்பு சேர்ப்பதாகவும் கூறினார்.
அம்பேத்கர் ஸ்மிருதி வனத்தில் உள்ள 81 அடி பீடத்தில் நிறுவப்பட்டுள்ள 125 அடி உயர சிலை உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை என்றும், அம்பேத்கரின் தனித்துவத்தையும் அவருடைய சீர்திருத்த சிந்தனைகளையும் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார். நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில், குறிப்பாக பெண்களின் வரலாற்றில் அம்பேத்கர் செல்வாக்கு செலுத்தி வருகிறார் என்றும் கூறினார்.
அம்பேத்கரின் இந்த மாபெரும் சிலை ரூ.404.35 கோடி செலவில் 18.81 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை 100 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. சிலைக்கான மூலப்பொருட்கள் பெறுவது முதல் வடிவமைப்பை இறுதி செய்வது வரை அனைத்தும் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே நடைபெற்றுள்ளன.
சிலையை நிறுவுவதற்கு நகரின் மையத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்வராஜ் மைதானத்தை ஆந்திர மாநில அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இந்த மைதானத்தில் காலை மற்றும் மாலையில் பொதுமக்கள் நடைபயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சிலை அமைந்துள்ள பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அனுபவ மையத்தில் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை காட்சிகள் எல்.ஈ.டி திரைகளில் காட்சிப்படுத்தப்படும். 2000 இருக்கைகள் கொண்ட மாநாட்டு மையம், 8000 சதுர அடியில் உணவு அரங்கம், குழந்தைகள் விளையாடும் இடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை அடங்கும் அமைந்துள்ளன.