முதலீடு திட்டத்தை தேர்வு செய்வதில் இந்தியப் பெண்கள் உஷார்: நிலையான வைப்பு நிதியை தேர்வு செய்யவே 51% பேர் விருப்பம்

முதலீடு திட்டங்களை தேர்வு செய்வதில் இந்தியப் பெண்கள் மிகவும் கவனமாக செயல்படுவதாக டிபிஎஸ் வங்கி மற்றும் கிரிசில் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிதி தொடர்பாக முடிவெடுப்பதில் நகர்ப்புற இந்தியப் பெண்களின் பங்களிப்பு பெரும்பான்மையாக உள்ளது. பெருநகரங்களில் வசிக்கும் பெண்கள் ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யவே விரும்புகின்றனர். அதன்படி, 51% பெண்கள் தங்களது முதலீட்டு தொகுப்புக்கு நிலையான வைப்பு நிதி திட்டம் (எப்டி) மற்றும் சேமிப்பு கணக்கையே (எஸ்பி) தேர்வு செய்கின்றனர்.

பத்து நகரங்களில் உள்ள 800-க்கும்மேற்பட்ட பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. பெருநகரங்களில் சம்பாதிக்கும் பெண்களில் நிலையான வைப்பு திட்டங்களை தவிர தங்கத்தில் 16% பேரும், மியூச்சுவல் பண்டுகளில் 15% பேரும், ரியஸ் எஸ்டேட்டில் 10% பேரும் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால், பங்குச் சந்தை திட்டங்களில் வெறும் 7% பெண்கள் மட்டுமே முதலீடு செய்து அதிக ரிஸ்க் எடுக்க தயாராக உள்ளனர்.

பெண்கள் சுயதொழில் அல்லது மாத சம்பளம் பெறுபவர்களாக இருந்தாலும் குடும்ப நிதி சேமிப்பு தொடர்பான முடிவுகளில் அவர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். 47% பேர் சுதந்திரமான நிதி திட்டங்களையே தேர்வு செய்கின்றனர். எனினும், இது வயது, வசதிகளை சார்ந்தே உள்ளது.

25-35 வயதுடையவர்களுடன் ஒப்பிடும்போது 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுயாதீனமான நிதித் தேர்வுகளில் முன்னணியில் உள்ளனர். வீடு, குழந்தைகளின் கல்வி, மருத்துவ பராமரிப்பு என பெண்களின் வயதுக்கு ஏற்ப இலக்குகள் மாறுகின்றன. 43% திருமணமான பெண்கள் தங்கள் வருமானத்தில் 10-29% முதலீட்டிற்கு ஒதுக்குகின்றனர்.

கிரெடிட் கார்டு மற்றும் கடன் வாங்குவதில் பிராந்திய அளவில் மாறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, மும்பையில் 96% பெண்கள் கிரெடிட் கார்டையே நம்பியுள்ளனர். அதேசமயத்தில், கொல்கத்தாவில் 63% பெண்கள் மட்டுமே அவற்றை பயன்படுத்துகிறார்கள்.

அதேசமயம், அதிக சம்பளம் பெறும் பெண்களில் பாதிபேர் கடன் வலையில் சிக்குவதில்லை. ஆனால், வீட்டுக் கடன் அவர்கள் விருப்பத் தேர்வாக உள்ளது. இது, வீட்டு உரிமையாளராக வேண்டும் என்ற இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது

25-35 வயதுடைய பெண்களில் 33% பேர் ஆன்லைன் ஷாப்பிங்கிற்காக யுபிஐ மூலம் பேமண்ட் செய்யவே விரும்புகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 22% பேர் மட்டுமே இம்முறையை ஆதரிக்கின்றனர்.

பணப் பரிமாற்றம் (38%), பயன்பாட்டு கட்டண பில்கள் (34%), இணையவர்த்தக நிறுவனங்கள் மூலம் பொருட்கள் வாங்குதல் (29%) உள்ளிட்ட பல சேவைகளுக்கு யுபிஐ வழியாக பணம் செலுத்தவே விரும்புகின்றனர். இது, மக்களுக்கு ரொக்கத்தின் மீதான மோகம் குறைந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *