‘தற்காப்பு நடவடிக்கை’ – பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதலை ஆதரித்து இந்தியா கருத்து

பாகிஸ்தான் மீதான ஈரான் தாக்குதல் தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிவதாக இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள சன்னி தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் அல்-தும் முகாம்கள் மீது ஈரான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில், ஈரான் தற்காப்பு நடவடிக்கையாகவே பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

நேற்று (ஜன.17) வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடந்த சம்பவம் ஈரான் – பாகிஸ்தான் என்ற இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சினையின் விளைவு என்றாலும் இந்தியா தீவிரவாதத்துக்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரானின் தாக்குதல் ஒரு தற்காப்பு நடவடிக்கை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது” எனத் தெரிவித்துள்ளது.

ஈராக், சிரியா, பாகிஸ்தான்.. அடுத்தடுத்த தாக்குதல் ஏன்? 24 மணி நேரத்தில் ஈராக், சிரியா, பாகிஸ்தான் என மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது ஈரான். இதன் மூலம் சன்னி தீவிரவாத அமைப்புகளுக்கு ஓர் எச்சரிக்கையை அழுத்தமாக ஈரான் கடத்த விரும்புவதாக சர்வதேச விவகாரங்கள் தொடர்பான வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், தன்னைச் சுற்றியுள்ள பலவீனமான, அரசியல் ரீதியாக ஸ்திரத்தன்மையற்ற நாடுகளில் இருந்து தனது இறையான்மைக்கு, பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் அமைப்புகளைத் துவம்சம் செய்ய தயங்காது என்ற செய்தியை ஈரான் வலுவாகக் கடத்தும் விதமாகவே மூன்று நாடுகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான் காட்டம்; ஈரான் மவுனம்: ஈரான் நடத்திய தாக்குதல் சட்டவிரோத செயல் என்றும், பிரச்சினையை பேசி தீர்க்காமல் தாக்குதல் நடத்தியது கவலை அளிக்கக்கூடிய செயல் என்றும், இது இரு நாட்டு உறவை வெகுவாக பாதிக்கும் எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

ஆனால் இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை. இரு நாடுகளும் சுமார் 959 கி.மீ தூரத்துக்கு எல் லையை பகிர்ந்துள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியை ஒட்டியுள்ள ஈரானின் சிஸ்தான் பகுதியில் ஈரானின் சிறுபான்மையினராக இருக்கும் சன்னி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பலுசிஸ்தான் பகுதியில் உள்ள ஜெய்ஷ் அல்-தும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஈரானுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருக்கும் பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது இரு நாடுகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *