எழில் இயக்குநராகி 25 வருடங்கள்: சென்னையில் விழா
விஜய், சிம்ரன், மணிவண்ணன் நடிப்பில் வெளிவந்த படம் ‘துள்ளாத மனமும் துள்ளும்’. இந்தப் படத்தின் மூலம் எழில் இயக்குநராக அறிமுகமானார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் வெளியாகி வரும் 29-ம் தேதியுடன் 25 வருடம் ஆகிறது. இதையடுத்து ‘எழில் 25’ என்ற விழாவும் அவர் அடுத்து இயக்கும் ‘தேசிங்குராஜா 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவும் வரும் 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது. தயாரிப்பாளர் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி.ரவிச்சந்திரன் இவ்விழாவை நடத்துகிறார். எழில் இயக்கிய படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் இதில் கலந்துகொள்கிறார்கள். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி நிகழ்ச்சியை துவக்கி வைக்கிறார்.
இதுபற்றி இயக்குநர் எழில் கூறும்போது, “ சார்லி சாப்ளினின் ‘சிட்டி லைட்ஸ்’ அடிப்படையில்தான் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ கதையை எழுதினேன். முதலில் வடிவேலுவை ஹீரோவாக நடிக்க வைக்கப் பேசினோம். பிறகு சில ஹீரோக்களுக்கு கதை சொன்னேன். இறுதியில் விஜய் வந்தார். கதையில் கமர்சியல் விஷயங்களைச் சேர்த்து உருவாக்கினேன். அதற்குள் 25 வருடம் ஓடிவிட்டது. இதுவரை 15 படங்கள் இயக்கிவிட்டேன். ‘தீபாவளி’ படத்துக்கு பிறகு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இதனால் காமெடி கதைக்கு திரும்பினேன். அந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து தயாரிப்பாளர்கள் காமெடி கதைகளையே கேட்கிறார்கள். அடுத்து இயக்கும் ‘தேசிங்கு ராஜா 2’ படமும் காமெடியாகவே இருக்கும்” என்றார்