கோவை, நீலகிரியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்: வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
பிரதமர் மோடி தமிழகம் வருகை, ராமர் கோயில் கும்பாபிஷேகம், குடியரசு தினவிழா ஆகியவற்றை முன்னிட்டு கோவை மற்றும் நீலகிரியில் போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை ( ஜன.19 ) சென்னை வருகிறார். வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், தனுஷ் கோடியில் உள்ள கோயில்களுக்கும் சென்று வழிபடுகிறார். வரும் 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம், 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கோவையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரிய கடை வீதியில் உள்ள கோனியம்மன் கோயில், அவிநாசி சாலை தண்டு மாரியம்மன் கோயில், கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கோவை ரயில் நிலையம், போத்தனூர் மற்றும் வட கோவை ரயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்கா நல்லூர், உக்கடம், மேட்டுப் பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் கூறியதாவது: ”தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகை, அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம், குடியரசு தினவிழா என தொடர்ந்து நிகழ்ச்சிகள் இருப்பதால், கோவை மாநகர பகுதியில் கடந்த 13-ம் தேதியில் இருந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தபபட்டு உள்ளது. வெடி குண்டு நிபுணர்கள் அடங்கிய தனிப் படையினர் மாநகர பகுதி முழுவதும் சோதனை செய்து வருகிறார்கள். அத்துடன் இரவு நேரத்தில் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீஸார் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சுந்தர வடிவேல் உத்தரவின் பேரில், மாவட்டம் முழுவதும் 1000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கக்கனல்லா, நாடுகாணி, பாட்ட வயல், மண்வயல், முள்ளி, எருமாடு, குஞ்சப்பனை உட்பட 16 சோதனைச் சாவடிகளில் 24 மணி நேர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப் படுகின்றன.
குடியரசு தின விழா நடைபெறும் உதகை அரசுக் கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் காட்டேஜ்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 நாட்களாக போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமான நபர்கள் தங்கியிருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டுமென விடுதி உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.