ராமர் கோயில் திறப்பு: ஆன்மிகமா? வாக்கு வங்கியா?
இதுதான் பாரதிய ஜனதா கட்சியின் பூர்வாசிரம பெயர். ஜனசங் கட்சி மூன்று விஷயங்களில் தெளிவாக அதேசமயம் உறுதியாக இருந்தது. 1. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, 2. காஷ்மீர் சிறப்பு சட்டம் 370 ரத்து, 3. பொது சிவில் சட்டம். கிட்டத்தட்ட இந்த மூன்று விஷயங்களையும் பாரதிய ஜனதா கட்சி ஜனசங் விருப்பப்படி நிறைவேறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
ராமர் கோயில், 370-வது பிரிவு சட்டம் இரண்டுமே சரிதான் என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு விட்டது. பொது சிவில் சட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் சட்டசபையில் மசோதா இயற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.
இப்போது எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டம், காஷ்மீர் 370-வது பிரிவு சிறப்பு சட்டம் ரத்து பற்றி பெரிய அளவில் பேசுவதில்லை. அவர்கள் பேசுவது, பயப்படுவது எல்லாமே ராமர் கோயில் பற்றி தான். பாரதிய ஜனதாவை பொருத்தவரை அதுவும் குறிப்பாக பிரதமர் மோடியை பொருத்த வரை வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அவர் கையில் வைத்திருக்கும் வலுவான அஸ்திரம் அயோத்தி ராமர் கோயில்.
எனவேதான், அதன் திறப்பு விழாவில் பங்கேற்பதா வேண்டாமா என்பதில் எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள விவாதம் நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. அதுதான் பாரதிய ஜனதாவின் அரசியல் சூட்சுமம் என்று கூட சொல்லலாம்.
நாங்கள் மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுபவர்கள் எனவே அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு வரமாட்டோம் என்று எதிர்க்கட்சிகளால் உறுதியாக சொல்ல முடியவில்லை. முதலில் கம்யூனிஸ்ட் கட்சியும், அடுத்த சில வாரங்கள் கழித்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு திட்டம்: 1984-ல் பாபர் மசூதியில் இந்துக்கள் உள்ளே சென்று அங்கு இருக்கும் இந்துக் கோயிலை வழிபட திறந்து விட்டதே காங்கிரஸ்தான் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறியுள்ளார். அதேபோன்று, திமுகவைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக ஆன்மிக பக்தர்கள் அயோத்தி செல்ல கோரிக்கை வைத்தால் நாங்கள் அதை பரிசீலிப்போம் என்றார்.
ஆறுபடை வீடுகளுக்கு ஆன்மிக பக்தர்களை இலவசமாக அழைத்துச் செல்ல ஒரு திட்டத்தையும் அவர் அறிவித்திருக்கிறார். ஜெய் ராம் கோஷம் கோயில்களில் ஒலித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது கிரிக்கெட் ஸ்டேடியம் வரை வந்துவிட்டது. இதுதான் பாரதிய ஜனதாவின் யுக்தி.
பாரதிய ஜனதாவின் பெரும்பாலான தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவது இருக்கும். 1996 தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அது பற்றிய கேள்விக்கும் பதில் இல்லை. அதுதான் அவர்கள் அரசியல்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவர் ராமர் கோயில் பற்றி பெரிதாக எதுவும் பேச மாட்டார். நிருபர்கள் ராமர் கோயில் பற்றிய கேள்வியை கேட்டால் அதைத் தவிர்த்து விடுவார் வாஜ்பாய்.
உத்தர பிரதேசத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என்று சொல்லி தான் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்தது. அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை உத்தர பிரதேசத்தையும் தாண்டி அதை தேசிய அளவில் பேசு பொருளாக, விவாதத்துக்குரிய ஒரு பிரச்சினையாக மாற்றியது பாரதிய ஜனதா தான்.
அதனால்தான் 1991-ல் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக பெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம் என்றார். அவர் அளித்த கடைசி பேட்டியும் அதுதான்.
ஆட்சி கவிழ்ந்தது: ராமர் கோயில் கட்டுவதற்காக ரத யாத்திரை பிஹார் மாநிலத்துக்குள் நுழைந்தபோது எல்.கே. அத்வானியை கைது செய்தார் அன்றைய முதல்வர் லாலு பிரசாத் யாதவ். இதனை தொடர்ந்து வி.பி. சிங்குக்கு தந்த ஆதரவை பாரதிய ஜனதா விலக்கிக் கொண்டதையடுத்து மத்தியில் வி.பி. சிங் ஆட்சி கவிழ்ந்தது. இப்படி ராமர் கோயில் விவகாரம் உத்தரபிரதேசத்தில் ஆட்சி அமைக்க வழி வகுத்தது என்றால் மத்தியில் ஆட்சி கவிழ வும் அது காரணமானது.
ராமர் கோயில் கட்டுவது சம்பந்தமான தீர்ப்பில் இதுவே இறுதி தீர்ப்பு மேல் முறையீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. ராமர் கோயில் கட்டு வதற்கான பூமி பூஜை அயோத்தியில் கடந்த 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி போடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி போகக்கூடாது என்று காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி அந்த பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
பத்தாண்டு ஆட்சி என்பது வாக்காளர்களுக்கு அலுப்பு தட்டும் ஒரு விஷயமாக இருக்கும் என்ற அச்சத்தால்தான் ராமர் கோயில் விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்பது உண்மை. மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கு மோடி எடுத்திருக்கும் அஸ்திரம்தான் ராமர் கோயில்.
இப்போது கூட ராமர் கோயிலில் சிலை பிரதிஷ்டையை பிரதமர் மோடி செய்யலாமா? ராமர் கோயில் கும்பாபிஷேக சடங்குகள் இந்து மத முறைப்படி தான் நடக்கின்றனவா என்ற கேள்விகள் எல்லாம் வலுக்கத் தொடங்கியுள்ளன.
ராமர் கோயில் திறப்பு பாரதிய ஜனதா, ஆர்எஸ்எஸ் நடத்தும் நாடகம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால், பாரதிய ஜனதா இதற்கெல்லாம் எந்த பதிலுமே சொல்லவில்லை. விமர்சனங்களுக்கு அவர்களின் பதில் பெரும்பாலும் அமைதிதான். அதைக் காலம் பார்த்துக் கொள்ளும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.