அடி தூள்! எல்லா மாணவர்களுக்கும் இலவச காலை உணவு திட்டம்? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதைத் தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அறிவித்தார்.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 1543 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு திட்டம் தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நாள்தோறும் 18 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிட்டு பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, பொங்கல், காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் பசியின்றி படிப்பில் கவனம் செலுத்திடும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திட்டத்தை, ஏழை எளிய மாணவர்கள் அதிகமானோர் படிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், “காலை உணவுத் திட்டத்தை பொறுத்தவரையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த தமிழக முதல்வர் திட்டமிட்டு வருகிறார். அதற்கான சாதகமான அறிவிப்பு நிதி நிலை அறிக்கை கூட்டத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தாலும் வரலாம்” எனத் தெரிவித்துள்ளார்.