நவம்பர் & டிசம்பர் மின் கட்டணம்.. பழைய கட்டணத்தை விட 9 மடங்கு அதிகம்.. அன்புமணி அதிரடி கேள்வி
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின் கட்டணம் 3 மாதமாகியும் குறைக்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி ராமதாஸ், உடனே கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8.15ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப் படவில்லை.
பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப் பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணக் குறைப்பு நவம்பர் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று 31.10.2023 ஆம் தேதியிட்ட ஆணை எண்: 9-&இன் மூலம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர்& டிசம்பர் சுழற்சியில் குறைக்கப்பட்ட மின்கட்டணம் நடைமுறைப்படுத்தபட்டிருக்க வேண்டும். ஆனால், மின்கட்டணம் குறைக்கப்படாததற்கான காரணம் குறித்து கேட்ட போது, மின்கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி வீடுகள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று மின்வாரியம் கூறி வருகிறது. இது அப்பட்டமான ஏமாற்று வேலை.
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள மாடிகளின் எண்ணிக்கை, குடியிருப்புகளின் எண்ணிக்கை, மின் தூக்கி உள்ளதா, இல்லையா? என்பன உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆவணத் தொகுப்புகளில் உள்ளன. அவற்றின் உதவியுடன் ஒரு வாரத்தில் கட்டணக் குறைப்பால் பயனடையும் அடுக்குமாடி குடியிருப்புகளை கண்டறிந்து கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்தியிருக்க முடியும். வீடு வீடாக கணக்கெடுத்திருந்தால் கூட, 15 நாட்களில் இந்த பணியை முடித்திருக்க முடியும்.