“மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை!” – அமைச்சர் உதயநிதி
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில், 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், பா.ஜ.க ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியோடு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
ராமர் கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்க இன்னும் சில காலம் ஆகலாம் எனக் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாக லோக் சபா தேர்தலுக்கு முன்பாக ஜனவரி 22-ம் தேதி கோயில் திறக்கப்படுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
பிரதமர் மோடி முதல் பா.ஜ.க தலைவர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்துகொள்ளும் அதேவேளையில், `தேர்தல் ஆதாயத்துக்காக மதத்தை வைத்து பா.ஜ.க அரசியல் செய்கிறது’ என காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி போன்ற எதிர்க்கட்சிகள் இதனைப் புறக்கணித்துவிட்டன.
அயோத்தி ராமர் கோயில்
இப்படியிருக்க, ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் மாநில இளைஞரணி மாநாட்டை தி.மு.க நடத்தவிருக்கும் `சூழலில், மசூதியை இடித்துவிட்டு கோயிலைக் காட்டியதால், எங்களுக்கு அதில் உடன்பாடு கிடையாது’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை மாலை அணிவித்து, இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “டிசம்பரில் நடக்க வேண்டிய இளைஞரணி மாநாடு, சென்னை வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் என இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு ஜனவரி 21-ம் தேதி நடக்கவிருக்கிறது. மூன்றிலிருந்து நான்கு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். `மாநில உரிமைகள் மீட்பு மாநாடு’ என்ற தலைப்பில்தான் மாநாடு நடக்கிறது.