“தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது” – பொது சுகாதாரத் துறை இயக்குநர்!
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் தொடங்கும் போதே, கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனிடையே டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் குளிர் மற்றும் மழைக் காலங்களில் தீவிரமாக பெருக்கமடைகின்றன. இதன் காரணமாக மழை, குளிர் காலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது.
இந்நிலையில் பருவமழைக் காலங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 4,500-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கடந்த ஆண்டில் 9,121 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதுடன், அவர்களில் 10 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளன. இந்த நிலையில் டெங்கு பரவுதலின் வேகம் படிப்படியாக குறைந்து வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
: ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டி – நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ‘மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக விரிவாக மேற்கொண்டு வந்தோம். பெரு மழை பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள மீட்பு பணிகளுக்கு பிறகு கொசுக்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 26,000-க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் பயனாக கடந்த சில நாள்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்த மாதத்தில் இதுவரை 922 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நோய் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
கடந்த மாதத்தில் தினமும் சராசரியாக 80 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டது. அது தற்போது 30-ஆகக் குறைந்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் டெங்கு பாதிப்பு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரும்.’