கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ்… ஹீரோவாக தூள் கிளப்பும் ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் டிரைலர் இதோ
ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமான இவர் தீயா வேலை செய்யணும் குமாரு, நானும் ரெளடி தான் போன்ற படங்களில் தன்னுடைய துறுதுறு நடிப்பால் பாராட்டை பெற்றார். இதையடுத்து எல்கேஜி படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார் ஆர்.ஜே.பாலாஜி. அரசியல் நையாண்டியுடன் கூடிய காமெடி படமான இதற்கு கதாசிரியராகவும் பணியாற்றி இருந்தார் ஆர்.ஜே.பாலாஜி.
எல்கேஜி படத்தின் வெற்றிக்கு பின்னர் முழுநேர ஹீரோவாக உருவெடுத்த அவர், அடுத்ததாக நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்கிற திரைப்படத்தை எடுத்தார். இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்ததோடு, சரவணன் என்பவருடன் இணைந்து இப்படத்தை இயக்கியும் இருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. இதையடுத்து பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்தார் பாலாஜி.
வீட்ல விசேஷம் என்கிற பெயரில் வெளிவந்த இப்படம் வசூலை வாரிக்குவித்து அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அடுத்ததாக நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். இவர் விஜய்யின் GOAT பட ஹீரோயின் ஆவார். இப்படத்தை இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் இயக்கி உள்ளார்.
சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெய்ண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது யூடியூப்பில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றது.