நான் தான் வெற்றி பெற்றேன்.. அமைச்சரின் சூழ்ச்சியால் இரண்டாமிடம்- ஜல்லிக்கட்டு வீரர் புகாருக்கு மூர்த்தி பதில்
பொங்கல் பண்டிகை வந்துவிட்டாலே, ஜல்லிக்கட்டுப்போட்டிகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். தமிழர்களுடைய வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தை சுற்றி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும். இந்த போட்டியில் ஆயிரக்கணக்கான காளைகள் களத்தில் இறங்கும். இந்த காளைகளை அடக்க காளையர்களும் முட்டி மோதுவார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாடு பிடி வீரருக்கு கார் பரிசு வழங்கப்படும். இதே போல சிறந்த காளைக்கும் பரிசு வழங்கப்படும். அந்த வகையில் நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியானது ஐபிஎல் போட்டியை விட பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது.
முதலிடம் பெற்றது யார்.?
அந்த வகையில் இரண்டு வீர்ர்கள் சரிசம்மாக 17 காளைகள் பிடித்திருந்த நிலையில், கடைசி சுற்றில் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். 17 காளைகளை அடக்கி அபிசித்தர் இரண்டாவது இடம் பிடித்தார். இதனிடையே போட்டியில் தான் தான் வெற்றி பெற்றதாகவும், தான் சிவகங்கையை சேர்ந்தவன், முதல் இடம் பெற்றவர் மதுரையை சேர்ந்தவர், இதன் காரணமாகவே அவருக்கு முதல் இடம் வழங்கப்பட்டது. இதில் அமைச்சரின் சூழ்ச்சி உள்ளது.
நான் இரண்டு சுற்று மட்டுமே பங்கேற்று காளைகளை அடக்கினேன். முதல் இடம் பிடித்தவர் 3 சூற்றுகளில் களம் இறங்கினார். மேலும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்காக போலீசார் என்னையும், எனது குடும்பத்தையும் அவதூறாக பேசினார்கள். எனவே மாடு பிடித்தது தொடர்பாக வீடியோ ஆதாரங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறினார்.
இருவருக்கும் சரிசமமான வாய்ப்பு
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மூர்த்தி இருவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் தான் மாடு பிடிப்பது தொடர்பாக கணக்கெடுப்பார்கள். எங்களைப்பொறுத்த வரை முடிவு சரியாகத்தான் உள்ளது. இரண்டு வீரர்களும் சமமான நிலையில் இருந்தார்கள். நான் 2 முதல் 3 மணி நேரம் அங்கு இல்லை. எந்தவித குறைபாடு இல்லை. மாடு பிடித்ததற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளது. மீடியாக்கள் அங்கு உள்ளார்கள். அத்தனை டிவிக்களும் நேரடியாக ஒளிபரப்பி உள்ளார்கள். இதில் யாருக்கும் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என கிடையாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.