அயோத்தி ராமருக்கு 1265 கிலோ பிரம்….மாண்ட லட்டு.. !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்காக இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தாராளமாக பரிசு பொருட்களை அள்ளி வழங்கி குவித்து வருகின்றனர்.
இதனையடுத்து கோவிலுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும், நன்கொடைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வரும் நாகபூஷன் ரெட்டி அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்குவதற்காக 1,265 கிலோ எடை கொண்ட லட்டுவை தயாரித்துள்ளார்.
இதனை சாலை வழியாக விரைவில் அயோத்திக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த லட்டு குளிர்பதன பெட்டியில் வைத்து அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
இந்த லட்டு குறித்து இதனை தயாரித்த நாகபூஷன் ரெட்டி, “நான் கடந்த 24 வருடங்களாக கேட்டரிங் தொழிலில் இருந்து வருகிறேன் அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையில் கும்பாபிஷேகம் நடைபெறும் போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் கனவு.
அதன்படி பூமி பூஜை தொடங்கிய நாளிலிருந்து தினமும் ஒவ்வொரு கிலோ லட்டுவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இது மொத்தமாக 1265 கிலோ கொண்ட பிரம்மாண்ட லட்டுவாக உருவாகியுள்ளது. இந்தப் பணியில் 30 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனை அயோத்தி ராமருக்கு காணிக்கையாக செலுத்த வேண்டிக் கொள்கிறோம். அதற்காக குளிர் பதன பெட்டியில் வைத்து பாதுகாப்பாக சாலை மார்க்கமாக அயோத்திக்கு கொண்டு செல்லப்பட உள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.