போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு பின் முக்கிய முடிவு: அமைச்சர் சிவசங்கர்!

போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 19ஆம் தேதியன்று சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளடக்கிய 16 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின.

இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்தன. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதில் சிக்கலும், போக்குவரத்து முடங்கும் அபாயமும் ஏற்பட்டது.

எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. ஆனாலும், திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

அதன் தொடர்ச்சியாக, போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு கடந்த 5ஆம் தேதியும், 8ஆம் தேதியும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அதன்படி, ஜனவரி 9ஆம் தேதியன்று போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, இது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றது. மேலும், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஜனவரி 19ஆம் தேதி (நாளை) வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்த தொழிற்சங்கங்கள், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளன.

அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை நாளை நடைபெறவுள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1 வாரத்திற்குள் சிறப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *